திருப்புகழ் · 1097எழுபிறவி நீர்நில (பொதுப்பாடல்கள்)

தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான

Thiruppugazh Anbargal

எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.

பத உரை

  • எழுபிறவி நீர்நிலத்தில்
    ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே,
  • இருவினைகள் வேர்பிடித்து
    நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு,
  • இடர்முளைகளேமுளைத்து வளர்
    துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து,
  • மாயை எனும் உலவையே பணைத்து
    பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து,
  • விரககுழையே குழைத்து
    காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு,
  • இருளிலைகளே தழைத்து மிகநீளும்
    அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி,
  • இழவுநனையேபிடித்து
    கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு,
  • மரணபழமே பழுத்து
    இறப்பு என்னும் பழம் பழுத்து,
  • இடியுமுடல் மாமரத்தின்
    கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின்
  • அருநீழல் இசையில்விழ
    அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக,
  • ஆதபத்தி* யழியுமுன மேயெனக்கு
    (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே
  • இனியதொரு போதகத்தை யருள்வாயே
    இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக.
  • வழுவுநெறி பேசு தக்கன்
    தவறான வழியையே பேசிய தக்ஷன்
  • இசையு மக சாலையுற்ற
    அமைத்த யாகசாலைக்குச் சென்ற
  • மதியிரவி தேவர் வஜ்ரபடையாளி
    சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன்,
  • மலர்கமல யோனி
    திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன்,
  • சக்ர வளைமருவு பாணி
    சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால்,
  • விக்ர மறைய
    இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க,
  • எதிர் வீரவுக்ரர் புதல்வோனே
    அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே,
  • அழகிய கலாபகற்றை விகடமயி லேறி
    அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி,
  • எட்டு அசலமிசை வாகையிட்டு வரும்வேலா
    எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே,
  • அடலசுரர் சேனைகெட்டு
    வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு
  • முறியமிக மோதிவெட்டி
    முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து,
  • அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே.
    தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * ஆதபத்தி என்றால் குடை.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout