திருப்புகழ் · 1096விடமளவி யரிபரவு (பொதுப்பாடல்கள்)

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான

Nangalappa Sharanam

விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென ...... அநுராகம்
விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி ...... வையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு ...... பதமோடி
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம ...... திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ ...... குடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

பத உரை

  • விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கல கல் என அநுராகம் விளைய
    விஷம் கலந்ததாய், ரேகைகள் பரவினதாய் உள்ள கண்கள் குவிய, பேச்சு பதற, அசைவுற்று வளையல்கள் கல கல் என்று ஒலிக்க, காம ஆசை உண்டாக,
  • ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை அடர் அளகம் அவிழ அணி துகில் அகல
    கஸ்தூரி அணிந்ததும், அரும்பு போன்றதுமான மார்பகத்தில் புளகம் உண்டாக, நெற்றியில் வியர்வை வர, அணிகலன்கள் சிதற, (தேன் நிறைந்த) மலர் மாலை நெருங்கியுள்ள கூந்தல் அவிழ்ந்து விழ, அணிந்துள்ள ஆடை விலக,
  • அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசம் உறுகினும் அடிகள் மறவேனே
    அமுதம் பொதிந்துள்ள வாயிதழ் ஊறலை உண்டு விலைமாதர்களுடன் படுக்கையின் மீது ஆரவாரங்கள் உண்டாக காமக் கடலில் முழுகி பரவசம் அடையினும் உனது திருவடிகளை மறக்க மாட்டேன்.
  • உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிர(ம்) உரகர் பில(ம்) முடிய ஒரு பதம் ஓடி உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர
    கோபத்துடன் வந்த முயலகன்* என்னும் பூதத்தின முதுகு நெறு நெறு என்று முறிய, இருள் பரந்த நாக லோகமும் பாதாள முழுதும் ஒப்பற்ற அடி ஓடி உருவவும், பழமையான ஆகாயத்தின் உச்சி இடியவும், சந்திரனின் முடி நகரவும்,
  • உயர அகில புவனம் அதிர வீசி கடக(ம்) கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமோடு அழகுடன் ஆடும் கலப கக மயில் கடவி
    (நடனத்தின் போது) உயரும் போது, சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும், வீசி கங்கணம் அணிந்த கைகள் விளங்க நடனம் செய்யும் சிவபெருமான் மகிழும்படியான அழகுடன், எண்ணுதற்கரிய வகையில் எழிலுடன் ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி,
  • நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே.
    அசுரர்களின் (நாற்படைகளான) யானை, தேர், குதிரை, காலாட்படைளுடன் போர் புரிந்த பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * தாருக வனத்து முனிவர்கள் சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். பலி ஏற்க சிவன் அங்கு சென்றபோது, முனிவர்களின் மங்கையர் அவர் அழகைக் கண்டு மோகம் கொண்டனர். முனிவர்கள் கோபம் கொண்டு சிவனைக் கொல்ல ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர். வேள்வியில் ஒரு புலி எழுந்தது. புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டார். வேள்வியிலிருந்து பின் மழு, மான், அரவம், பூதங்கள், வெண்டலை, துடி, முயலகன் என்ற பூதம், தீ இவைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. சிவன் முயலகனைத் தள்ளி மிதித்து நடனம் ஆடினார் .. சிவபுராணம்.
  • * The sages in ThArukavanam heckled Lord SivA and performed a sacrifice against Him. When SivA went to the place of sacrifice to obtain the offering, the wives of the sages fell in love with Him. This enraged the sages who performed yet another ferocious sacrifice from which a tiger emerged which was sent to kill SivA. Destroying that tiger, SivA wore its hide as clothing. From the sacrificial-pyre, a series of things emerged, one after one, such as a pick-axe, a deer, a serpent, devils, a weapon called veNdalai, a hand-drum, a demon called Muyalakan and a pot of fire. Siva conquered them all and wore them on His body while He vanquished the demon Muyalakan upon whose body He danced the cosmic dance. - Siva purANam.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout