திருப்புகழ் · 1040நாராலே தோல் (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

Thiruppugazh Anbargal

நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் ...... குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார்வேதத் ...... தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
டேயூர் பாதத் ...... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.

பத உரை

  • நாராலே தோல் நீராலேயாம்
    நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள
  • நானா வாசற் குடிலூடே
    பலவித வாயில்களை (நவத் துவாரங்களை*) உடைய குடிசையாகிய இந்த உடலினுள்
  • ஞாதாவாயே வாழ்கால் ஏகாய்
    அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம்
  • நாய்பேய் சூழ்கைக்கு இடமாமுன்
    நாயும் பேயும் என் உடலைச் சூழுதற்கான காலம் வருமுன்பாக,
  • தாரார் ஆர்தோள் ஈராறானே
    ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே,
  • சார்வானோர்நற் பெருவாழ்வே
    உன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல பெரு வாழ்வே,
  • தாழாதே நாயேன் நாவாலே
    சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் என் நாவைக்கொண்டு
  • தாள்பாடாண்மைத் திறல்தாராய்
    உன் திருவடிகளைப் பாடும் வலிமைத்திறலைத் தருவாயாக.
  • பாரேழோர்தாளாலே யாள்வோர்
    ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும்,
  • பாவார்வேதத்து அயனாரும்
    தூய்மையான பாடல்கள் உள்ள வேதத்தை ஓதும் பிரமனும்,
  • பாழூடே வானூடே பாரூடேயூர் பாதத்தினை நாடா
    வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் பாதத்தினை நாடமுடியாத
  • சீரார் மாதோடேவாழ்வார்
    சிறப்பினை உடையவரும், பார்வதி தேவியுடன் வாழ்பவரும்,
  • நீள் சேவூர்வார் பொற் சடையீசர்
    பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான ஈசர் சிவபிரானுடைய
  • சேயே வேளே பூவே கோவே
    குமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே,
  • தேவே தேவப் பெருமாளே.
    தெய்வமே, தேவர்களின் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
  • * The nine portals of the body: two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout