திருப்புகழ் · 1038ஊனே தானாய் (பொதுப்பாடல்கள்)

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான

Saminathan chennai தன்னம்பிக்கை ஊட்டும் தமிழ்

ஊனே தானா யோயா நோயா
லூசா டூசற் ...... குடில்பேணா
ஓதா மோதா வாதா காதே
லோகா சாரத் ...... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ...... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன் மாயக் ...... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ...... குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...... கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ...... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.

பத உரை

  • ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசற் குடில்பேணா
    ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, என்றும் முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப்போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,
  • ஓதா மோதா வாது ஆகாதே லோக ஆசாரத்து உளம் வேறாய்
    நூல்களை ஓதியும், தாக்கிப் பேசியும், செய்கின்ற சமய வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு,
  • நானே நீயாய் நீயே நானாய்
    எனது ஜீவாத்மா பரமாத்மாவாகிய உன்னிடம் ஒன்றுபட்டுப் பொருந்தி,
  • நானா வேதப் பொருளாலும் நாடா வீடாய்
    பலவகையான வேதப்பொருள் கொண்டு உன்னை நாடி விரும்பி வீடு பேற்றை அடைந்தவனாய்,
  • ஈடேறாதே நாயேன் மாயக் கடவேனோ
    என் ஜன்மம் சாபல்யம் அடையாமல் நாயனைய அடியேன் இறந்துபோகக் கடவேனோ?
  • வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே
    விண், காற்று, தீ, நீர், பார் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி, இவ்வுலகிலுள்ள பெரியோருக்கு உரியவனாகத் திகழ்பவனே,
  • மாயா மானே கோனே மானார் வாழ்வே கோழிக் கொடியோனே
    என்றும் அழிவில்லாத பெரியோனே, அரசனே, மான்போன்ற அழகியர் வள்ளி, தேவயானைக்கு செல்வக் கணவனே, கோழிக் கொடியை உயர்த்தியவனே,
  • தேனே தேன் நீள் கான் ஆறாய்வீழ்
    தேன் போன்று இனிப்பவனே, தேனாறு என்னும் நீண்ட காட்டாறு பாய்கின்ற
  • தேசு ஆர் சாரற் கிரியோனே
    ஒளி பொருந்திய மலைப்பகுதியான (குன்றக்குடி* என்ற) தலத்தில் அமர்ந்தவனே,
  • சேயே வேளே பூவே கோவே
    ஈசன் மகனே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே,
  • தேவே தேவப் பெருமாளே.
    தேவனே, தேவர்களின் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * தேனாறு பாயும் ஊர் குன்றக்குடியாதலால், இப்பாடல் அத்தலத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
  • * ThEnARu is the river that flows near KundRakkudi; hence this common song may be considered as referring to that place.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout