திருப்புகழ் · 1037வாதந் தலைவலி (பொதுப்பாடல்கள்)

vAdhanthalaivali

தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியிவை ...... யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ...... மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி ...... லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை ...... பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ...... மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத ...... லுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ...... விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வாதம் தலை வலி சூலம் பெரு வயிறு
    வாத சம்பந்தமான நோய்கள், தலைவலி, சூலை நோய், மகோதரம் என்ற வயிற்றில் நீர் தேக்கம்,
  • ஆகும் பிணி இவை அணுகாதே
    ஆகிய நோய்களாகிய இவை ஒன்றும் என்னை அணுகாமலும்,
  • மாயம் பொதி தரு காயம் தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே
    மாயை நிரம்பி உள்ள உடல் கொண்டு வாழும்படி கருவின் வழியில் மீண்டும் என்னைச் சேர்க்காமலும்,
  • ஓதம் பெறு கடல் மோதும் திரை அதுபோலும் பிறவியில் உழலாதே
    வெள்ளமாய் நிறைந்து நிற்கும் கடலில் மேலும் மேலும் வீசுகின்ற அலைகள் போல் பல பிறப்புக்களில் நான் அலைச்சல் உறாமல்,
  • ஓதும் பலஅடியாருங் கதிபெற
    உன் திருப்புகழை ஓதும் பல அடியார்களும் நற்கதி அடையவும்,
  • யான் உன் கழல் இணை பெறுவேனோ
    நான் உனது இரண்டு திருவடிகளையும் பெறுவேனோ?
  • கீதம் புகழ் இசை நாதம் கனிவோடு
    இசை இன்பமும், உன் புகழைச் சொல்லும் ஓசை இன்பமும், பக்தியோடு
  • வேதம் கிளர் தர மொழிவார் தம்
    வேத வாக்கியங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடைய
  • கேடின் பெரு வலி மாளும் படி அவரோடும் கெழுமுதல் உடையோனே
    கேட்டினை விளைவிக்கும் ஊழ்வினையின் திண்மை அவர்களைப் பீடிக்காது ஒழியும்படி அவர்களோடு எப்போதும் பொருந்தி உடனிருந்து காக்கும் திருவருளை உடையவனே,
  • வேதம் தொழு திரு மாலும் பிரமனும்
    வேதங்கள் தொழுகின்ற திருமாலும், பிரமனும்
  • மேவும் பதம் உடை விறல் வீரா
    விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரனே,
  • மேல் வந்து எதிர்பொரு சூரன் பொடிபட
    மேலெழுந்து வந்து போர் செய்த சூரன் பொடியாகும்படி,
  • வேல் கொண்டு அமர்செய்த பெருமாளே.
    வேலாயுதத்தைக் கொண்டு சண்டை செய்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits