திருப்புகழ் 1014 படிதனில் உறவெனும் (பொதுப்பாடல்கள்)

தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
படிதனி  லுறவெனு  மனைவர்கள்  பரிவொடு 
பக்கத்  திற்பல  கத்திட்  டுத்துயர்  ......  கொண்டுபாவப் 
பணைமர  விறகிடை  யழலிடை  யுடலது 
பற்றக்  கொட்டுகள்  தட்டிச்  சுட்டலை  ......  யொன்றியேகக் 
கடிசம  னுயிர்தனை  யிருவிழி  யனலது 
கக்கச்  சிக்கென  முட்டிக்  கட்டியு  ......  டன்றுபோமுன் 
கதிதரு  முருகனு  மெனநினை  நினைபவர் 
கற்பிற்  புக்கறி  வொக்கக்  கற்பது  ......  தந்திடாயோ 
வடகிரி  தொளைபட  அலைகடல்  சுவறிட 
மற்றுத்  திக்கெனு  மெட்டுத்  திக்கிலும்  ......வென்றிவாய 
வலியுட  னெதிர்பொரு  மசுரர்கள்  பொடிபட 
மட்டித்  திட்டுயர்  கொக்கைக்  குத்திம  ......  லைந்தவீரா 
அடர்சடை  மிசைமதி  யலைஜல  மதுபுனை 
அத்தர்க்  குப்பொருள்  கற்பித்  துப்புகழ்  ......  கொண்டவாழ்வே 
அடியுக  முடியினும்  வடிவுட  னெழுமவு 
னத்திற்  பற்றுறு  நித்தச்  சுத்தர்கள்  ......  தம்பிரானே. 
  • படி தனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டுத் துயர் கொண்டு பாவ
    இப்பூமியில் சுற்றத்தார்களாக உள்ள எல்லாரும் அன்புடன் பக்கத்திலே நின்று அழுகைக் கூச்சலிட்டு துக்கம் கொண்டு சூழ்ந்து பரவி நிற்க,
  • பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டு அலை ஒன்றி ஏக
    பெருத்த மரக் கட்டைகளில் உண்டாகும் நெருப்பிடையே உடல் தீப்பிடிக்க, பறைகள் கொட்டி, உடலைச் சுட்டு, அலைகள் உள்ள நீரில் படிந்து குளித்து, அவரவர் வீட்டுக்குச் செல்ல,
  • கடி சமன் உயிர் தனை இரு விழி அனல் அது கக்கச் சிக்கென முட்டிக் கட்டி உடன்று போ முன்
    அழித்தல் தொழிலை உடைய யமன் உயிரை (தனது) இரு கண்களும் நெருப்பு உமிழ அகப்படும்படித் தாக்கி, கட்டி, கோபத்துடன் கொண்டு போவதற்கு முன்பாக,
  • கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்கக் கற்பது தந்திடாயோ
    நற்கதியை நமக்கு முருகன் ஒருவனே தருவான் என்று உன்னை நினைப்பவர்களுடைய கதியான நெறியில் (நானும்) புகுந்து, நல்லறிவு கூடும்படி உன்னை ஓதிப் பயிலும் கருத்தை எனக்குத் தந்திடாயோ?
  • வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்றுத் திக்கு எனும் எட்டுத் திக்கிலும் வென்றிவாய
    வடக்கே உள்ள கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், அலை வீசும் கடல் வற்றிப் போகவும், மற்றுத் திசைகளாகிய எட்டுத் திக்குகளிலும் வெற்றி கிடைக்கவும்,
  • வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கைக் குத்தி மலைந்த வீரா
    வலிமையுடன் உன்னை எதிர்த்துச் சண்டை செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியவும், அவர்களை முறியடித்திட்டு, உயரமான மாமரமாக உருமாறிய சூரனை வேலால் குத்தி எதிர்த்த வீரனே,
  • அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்குப் பொருள் கற்பித்துப் புகழ் கொண்ட வாழ்வே
    நெருங்கிய சடையின் மேல் நிலவையும், அலை கொண்ட கங்கை நீரையும் சூடியுள்ள தந்தையாகிய சிவ பெருமானுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்து தகப்பன் சாமி என்று புகழைக் கொண்ட செல்வனே,
  • அடி உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்று உறு நித்தச் சுத்தர்கள் தம்பிரானே.
    கடைசியான யுகாந்த காலத்தும் தங்கள் வடிவு குலையாமல் தோற்றம் தருபவர்களும், மெளன நிலையில் பற்று வைத்துள்ளவர்களும், நித்ய சூரிகளுமான பரிசுத்தர்கள் போற்றும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com