திருப்புகழ் 1013 முகமும் மினுக்கி (பொதுப்பாடல்கள்)

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகமுமி  னுக்கிப்  பெருங்க  ருங்குழல் 
முகிலைய  விழ்த்துச்  செருந்தி  சண்பக 
முடியநி  றைத்துத்  ததும்பி  வந்தடி  ......  முன்பினாக 
முலையைய  சைத்துத்  திருந்த  முன்தரி 
கலையைநெ  கிழ்த்துப்  புனைந்து  வஞ்சக 
முறுவல்வி  ளைத்துத்  துணிந்து  தந்தெரு  ......  முன்றிலூடே 
மகளிர்வ  ரப்பிற்  சிறந்த  பந்தியின் 
மதனனு  நிற்கக்  கொளுந்து  வெண்பிறை 
வடவையெ  றிக்கத்  திரண்டு  பண்டனை  ......  வண்டுபாட 
மலயநி  லத்துப்  பிறந்த  தென்றலு 
நிலைகுலை  யத்தொட்  டுடம்பு  புண்செய 
மயலைய  ளிக்கக்  குழைந்து  சிந்தைம  ......  லங்கலாமோ 
பகலவன்  மட்கப்  புகுந்து  கந்தர 
ககனமு  கட்டைப்  பிளந்து  மந்தர 
பருவரை  யொக்கச்  சுழன்று  பின்புப  ......  றந்துபோகப் 
பணமணி  பட்சத்  துரங்க  முந்தனி 
முடுகின  டத்திக்  கிழிந்து  விந்தெழு 
பரவைய  ரற்றப்  ப்ரபஞ்ச  நின்றுப  ......  யந்துவாடக் 
குகனென  முக்கட்  சயம்பு  வும்ப்ரிய 
மிகவசு  ரர்க்குக்  குரம்பை  வந்தரு 
குறவமர்  குத்திப்  பொருங்கொ  டும்படை  ......  வென்றவேளே 
குழைசயை  யொப்பற்  றிருந்த  சங்கரி 
கவுரியெ  டுத்துப்  பரிந்து  கொங்கையில் 
குணவமு  துய்க்கத்  தெளிந்து  கொண்டருள்  ......  தம்பிரானே. 
  • முகமு(ம்) மினுக்கிப் பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்துச் செருந்தி சண்பக(ம்) முடிய நிறைத்துத் ததும்பி வந்து அடி முன் பி(ன்)னாக
    முகத்தை அலங்கரித்து நீண்ட கரிய கூந்தலாகிய மேகத்தை அவிழ்த்து, செருந்திப் பூ, சண்பகப் பூ முதலியவைகளை நிரம்ப வைத்து முடித்து களிப்புடன் வந்து, முன்னும் பின்னும் (தெருவில்) அடியிட்டு உலவி,
  • முலையை அசைத்துத் திருந்த முன் தரி கலையை நெகிழ்த்துப் புனைந்து வஞ்சக முறுவல் விளைத்துத் துணிந்து தம் தெரு முன்றில் ஊடே
    மார்பகங்களை அசைத்தும், சரிப் படுத்துவது போல முன்னே தரித்துள்ள ஆடையைத் தளர்த்தியும் அணிந்தும், வஞ்சகம் நிறைந்த புன்னகை புரிந்தும், துணிவுடன் தாம் வசிக்கும் தெருவின் முன் புறத்தில்,
  • மகளிர் வரப்பில் சிறந்த பந்தியின் மதனனும் நிற்கக் கொளுந்து வெண் பிறை வடவை எறிக்கக் திரண்டு பண் தனை வண்டு பாட
    பெண்களுடைய எல்லையில் அவர்களுடைய சிறப்புக் கூட்டத்தில் மன்மதனும் நின்று (அவன் பாணங்களை ஏவ), தீப் போல எரியும் வெண்ணிலாவும் வடமுகாக்கினி போல் நெருப்பைக் கக்க, கூட்டமாகக் கூடி ராகங்களை வண்டுகள் பாட,
  • மலய நிலத்துப் பிறந்த தென்றலும் நிலை குலையத் தொட்டு உடம்பு புண் செய மயலை அளிக்கக் குழைந்து சிந்தை மலங்கலாமோ
    பொதிய மலையில் நின்று புறப்படும் தென்றல் காற்றும் என் மன உறுதி கெடும்படி என் மேல் வீசி உடம்பு எல்லாம் புண்ணாகும்படித் தாக்கி காம இச்சையை விளைவிக்க, மனம் உருகி என் சிந்தை கலக்கம் அடையலாமோ?
  • பகலவன் மட்கப் புகுந்து கந்தர(ம்) ககன முகட்டைப் பிளந்து மந்தர பரு வரை ஒக்கச் சுழன்று பின்பு பறந்து போக
    சூரியனும் ஒளி குன்றி ஒடுங்கச் சென்று, மேகங்களைக் கொண்ட ஆகாய உச்சியில் கிழித்துச் சென்று, மந்தர மலை போன்ற பெரிய மலைகள் எல்லாம் ஒருங்கே சுழலும்படி (மயில் செல்லும் வேகத்தில்) அதன்பின் அவை பறந்து வரும்படியும்,
  • பணம் அணி பட்சத் துரங்கமும் தனி முடுகி நடத்திக் கிழிந்து விந்து எழு பரவை அரற்றப் ப்ரபஞ்ச(ம்) நின்று பயந்து வாட
    படத்தில் ரத்னங்களை கொண்ட பாம்பை கொத்தித் தின்னும் (மயிலாகிய) குதிரையை ஒப்பற்ற வகையில் வேகமாகச் செலுத்தி, அதனால் கிழிபட்டு நீர்த்துளிகள் எழுகின்ற கடல் ஓலமிடவும், ஐந்து பூதங்களால் ஆன உலகம் எல்லாம் நின்று பயப்பட்டு வாடவும்,
  • குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்குக் குரம்பை வந்து அருகு உற அமர் குத்திப் பொரும் கொடும் படை வென்ற வேளே
    (இந்தக் காட்சியைக் கண்டு) குக மூர்த்தியே என்று முக்கண் சுயம்பு நாதராகிய சிவனும் உன் மீது அன்பு கொள்ள, அசுரர்களுடைய உடல்கள் நெருங்கி வர, போர்க் களத்தில் அவர்களை வேலால் குத்திச் சண்டை செய்து (அவர்களுடைய) கொடிய சேனையை வென்ற செவ்வேளே,
  • குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்துப் பரிந்து கொங்கையில் குண அமுது உய்க்கத் தெளிந்து கொண்டு அருள் தம்பிரானே.
    குண்டலங்களை அணிந்துள்ள பார்வதி, ஒப்பில்லாது விளங்கிய சங்கரி, கெளரி (ஆகிய தேவி) உன்னை மடியில் எடுத்து அன்பு கூர்ந்து தமது திருமுலையில் உள்ள ஞானப் பாலை ஊட்ட, தெளிவுடன் அதை உட்கொண்டு (அனைவருக்கும்) அருள் பாலிக்கும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com