திருப்புகழ் 984 வானோர் வழுத்துனது (இராமேசுரம்)

தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
வானோர்  வழுத்துனது  பாதா  ரபத்மமலர் 
மீதே  பணிக்கும்வகை  ......  யறியாதே 
மானார்  வலைக்கணதி  லேதூ  ளிமெத்தையினி 
லூடே  யணைத்துதவு  ......  மதனாலே 
தேனோ  கருப்பிலெழு  பாகோ  விதற்கிணைக 
ளேதோ  வெனக்கலவி  ......  பலகோடி 
தீரா  மயக்கினொடு  நாகா  படத்திலெழு 
சேறா  டல்பெற்றதுய  ......  ரொழியேனோ 
மேனா  டுபெற்றுவளர்  சூரா  திபற்கெதிரி 
னூடே  கிநிற்குமிரு  ......  கழலோனே 
மேகா  ரவுக்ரபரி  தானே  றிவெற்றிபுனை 
வீரா  குறச்சிறுமி  ......  மணவாளா 
ஞானா  பரற்கினிய  வேதா  கமப்பொருளை 
நாணா  துரைக்குமொரு  ......  பெரியோனே 
நாரா  யணற்குமரு  காவீ  றுபெற்றிலகு 
ராமே  சுரத்திலுறை  ......  பெருமாளே. 
  • வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே
    தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல்,
  • மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே
    மான் விழியரான விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால்,
  • தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ எனக் கலவி பல கோடி தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ
    தேன் தானோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம் ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ?
  • மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின் ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே
    மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின் எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே,
  • மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குறச் சிறுமி மணவாளா
    மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே,
  • ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே
    ஞானப் பரம் பொருளாகிய சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல் உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே,
  • நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே.
    திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com