திருப்புகழ் 96 வஞ்சத்துடன் ஒரு (திருச்செந்தூர்)

தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன ...... தனதான
வஞ்சத்  துடனொரு  நெஞ்சிற்  பலநினை 
வஞ்சிக்  கொடியிடை  ......  மடவாரும் 
வந்திப்  புதல்வரும்  அந்திக்  கிளைஞரு 
மண்டிக்  கதறிடு  ......  வகைகூர 
அஞ்சக்  கலைபடு  பஞ்சிப்  புழுவுடல் 
அங்கிக்  கிரையென  ......  வுடன்மேவ 
அண்டிப்  பயமுற  வென்றிச்  சமன்வரும் 
அன்றைக்  கடியிணை  ......  தரவேணும் 
கஞ்சப்  பிரமனை  அஞ்சத்  துயர்செய்து 
கன்றச்  சிறையிடு  ......  மயில்வீரா 
கண்டொத்  தனமொழி  அண்டத்  திருமயில் 
கண்டத்  தழகிய  ......  திருமார்பா 
செஞ்சொற்  புலவர்கள்  சங்கத்  தமிழ்தெரி 
செந்திற்  பதிநக  ......  ருறைவோனே 
செம்பொற்  குலவட  குன்றைக்  கடலிடை 
சிந்தப்  பொரவல  ......  பெருமாளே. 
  • வஞ்சத்துடனொரு நெஞ்சிற் பலநினை
    வஞ்சனையுடன், நெஞ்சமாகிய ஒன்றில் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களும்,
  • வஞ்சிக் கொடியிடை மடவாரும்
    வஞ்சிக்கொடி போன்ற இடையை உடையவர்களும் ஆகிய பெண்களும்,
  • வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
    வணங்கும் புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தார்களும்,
  • மண்டிக் கதறிடு வகைகூர
    ஒன்று சேர்ந்து அழுகின்ற செயல் மிகுதியாக,
  • அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
    உடலின் பாகங்கள் யாவும் கலைபட்டுப் போய், பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு
  • அங்கிக் கிரையென வுடன்மேவ
    நெருப்புக்கு இரையாக்கப் படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட,
  • அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
    அருகே வந்து அச்சுறுத்தி உயிரை வெற்றி கொண்டு செல்வதற்கு யமன் வருகின்ற
  • அன்றைக்கு அடியிணை தரவேணும்
    அந்த நாளில் உனது இரு திருவடிகளையும் தந்தருள வேண்டும்.
  • கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
    தாமரை மலரில் அமரும் பிரமன் அஞ்சுமாறு துயரப்படுத்தி
  • கன்றச் சிறையிடும் அயில்வீரா
    அவன் மனம் நோகச் சிறையிட்ட வேலாயுத வீரனே,
  • கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
    கற்கண்டைப் போன்ற இனிய மொழி பேசும் தேவமாதாகிய அழகிய மயில் போன்ற தேவயானையின்
  • கண் தத்து அழகிய திருமார்பா
    கண்பார்வை பாய்கின்ற அழகிய திரு மார்பனே,
  • செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
    செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு
  • செந்திற் பதிநகருறைவோனே
    திருச்செந்தூர் நகரில் வீற்றிருப்பவனே,
  • செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
    செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே
  • சிந்தப் பொரவல பெருமாளே.
    சிதறி விழுமாறு போர் புரியவல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com