திருப்புகழ் · 919நிரைத்த நித்தில (திருத்தவத்துறை)

தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன
தனத்த தத்தன தானன தானன ...... தனதான

தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh

நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார்
நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக்
கதித்த பத்தமை சாலடி யார்சபை
மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
ருரைத்து ளத்திரு வாசக மானது
மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.

பத உரை

  • நிரைத்த நித்தில(ம்) நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இணை மார் முலை மேல் அணி
    வரிசையாயுள்ள முத்து மாலைகளையும், நீண்ட ரத்தின மாலைகளையும் தாங்கியுள்ளதும் மலைக்கு ஒப்பானதுமான மார்பகங்களின் மீது விளங்கும் மேலாடை,
  • நெறித்த நெய்க் குழல் வாள் விழி மா மதி முக மானார்
    சுருண்டதும் எண்ணெய்ப் பசை உள்ளதுமான கூந்தல், வாள் போன்ற கண்கள், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட மாதர்கள்,
  • நெளித்த சிற்றிடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர் தமையே மயல் நிரப்பி
    நெளியும் சிறிய இடையின் மேல் மேகலை பூண்ட ஆடையை உடுத்தி, பொருள் உள்ளவர்களுக்கு மிக்க காம மயக்கம் தந்து,
  • நித்தமும் வீதியில் நேர் உறு நெறியாலே கரைத்து இதக் குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உ(ள்)ளில் சுழலா வகையே
    நாள்தோறும் தெருவில் நைச்சியமான வழியில் கூப்பிட்டு அழைத்து, நன்மை தரும் குயில் போல் மொழி பேசுகின்ற விலைமாதர்களின் வலைக்குள்ளே விழுந்து நான் சுழலாதபடி,
  • உன கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனது உற மேவி
    உனது திருவடியை வணங்கும் வாழ்வே மனத்தில் பொருந்தி,
  • கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழிக் குண பாதகனேன் உயர் கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ
    இயற்கையாகவே உண்டாகும் பக்தி நிலை நிரம்பியுள்ள அடியார்களின் கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் பாவியாகிய நான் உயர்ந்த நற்கதியை நாடி மேன்மை அடையவே உனது திருவருள் உபதேசம் செய்யக்கூடாதோ?
  • வரைத் தநுக் கரர் மா தவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு மணிச் செவிக்குள் மெய்ஞ் ஞானம் அது ஓதிய வடிவேலா
    மேரு மலையை வில்லாக ஏந்திய கரத்தை உடையவர், நல்ல தவத்தை மேற்கொண்டவர்களின் மனமாகிய இடத்துள் வாழ்கின்றவர் ஆகிய சிவபெருமானின் சிறப்பும் அழகும் கொண்ட காதில் மெய்ஞ்ஞான உபதேசத்தைச் சொன்ன வடிவேலனே,
  • மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்துள திருவாசகம் ஆனது மனத்துள் எத்து
    போற்றத் தக்க முத்தமிழை ஆய்ந்தவர்களாகிய மேலோர் சொல்லியுள்ள திருவாசகத்தில் உள்ள உபதேச மொழிகளை (அடியார்கள்) மனதில் போற்றுகின்றதும்,
  • அழகார் புகழ் வீசிய மணி மாட திரைக் கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமெ பாய் வள நீர் பொலி செழித்த
    அழகு நிறைந்த புகழ் விளங்கும் மணி மாடங்களை உடையதும், அலை வீசும் கடல் போன்ற காவேரியாகிய பெரிய ஆற்றில் வெள்ளம் பெருகிப் பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவதும்,
  • நெல் செ(ந்)நெல் வாரிகளே குவை குவையாகச் செருக்கு செய்ப்பதி வாழ் முருகா
    நெற்பயிரும், செந்நெல் பயிரும் கும்பல் கும்பலாக விளைந்து பெருகிக் கிடப்பதும் ஆகிய வயலூரில் வாழ்கின்ற முருகனே,
  • அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே.
    (காஞ்சியில் முப்பத்திரண்டு) அறங்களை* வளர்த்த நித்ய கல்யாணியும், அருள் நிறைந்தவளும் ஆகிய உமாதேவி உறையும் திருத்தவத்துறை** ஆகிய லால்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு: சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
  • ** திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.
  • * Thirty-two religious duties are listed in Periya PurANam as follows: Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.
  • ** ThiruththavaththuRai is now known as LAlgudi, situated 10 miles north of TiruchirAppaLLi.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout