தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் ...... தனதான
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.
- அரிமருகோனே நமோவென்று
திருமாலின் மருமகனே போற்றி என்றும், - அறுதியிலானே நமோவென்று
முடிவு என்பது அற்றவனே போற்றி என்றும், - அறுமுக வேளே நமோவென்று
ஆறுமுகக் கடவுளே போற்றி என்றும், - உனபாதம் அரகர சேயே நமோவென்று
உனது பாதத்தில், பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும், - இமையவர் வாழ்வே நமோவென்று
தேவர்களின் செல்வமே போற்றி என்றும், - அருண சொரூபா நமோவென்று
செந்நிறத்துச் சொரூபனே போற்றி என்றும், - உளதாசை
பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது. - பரிபுர பாதா
வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே, - சுரேசன் தரு மகள் நாதா
தேவேந்திரன் பெற்ற மகள் தேவயானையின் நாதனே, - அராவின்பகைமயில் வேலாயுத ஆடம்பர
பாம்பின் பகையான மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே, - நாளும் பகர்தலிலா தாளை
ஒரு நாளேனும் நினைத்துச் சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி - ஏதுஞ் சிலதறியா ஏழை நானுன்
சிறிதளவு கூட எதுவும் அறியாத ஏழை நான் உன் திருவாயால் - பதிபசு பாச உபதேசம் பெறவேணும்
பதி, பசு, பாசம்* ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும். - கரதல சூலாயுதா
கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே, - முன் சலபதி போல் ஆரவாரம்
முன்னொரு நாள், கடல் போலப் பேரோலியும் - கடினசுராபான சாமுண்டியும் ஆட
கொடிய கள்ளைக் குடித்தலும் உடைய துர்க்கை ஆடவும், - கரிபரி மேலேறுவானும்
யானையை (ஐராவதம்) வாகனமாகக் கொண்ட இந்திரனும் - செயசெய சேனா பதீயென்
ஜெய ஜெய சேனாபதியே என்று ஆரவாரம் செய்யவும், - களமிசை தானேறியே
போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால் - அஞ்சிய சூரன் குரல்விட
பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும், - நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகம்
நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் - குடல்கொளவே
அவனது குடலைக் கீறித் தின்னவும், - பூசலாடும் பலதோளா
சண்டை செய்த பல தோள்களை உடையவனே, - குடதிசை வாராழி போலும்
மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம் போன்று - படர்நதி காவேரி சூழும்
பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த - குளிர்வயலூர் ஆர மேவும் பெருமாளே.
குளிர்ந்த வயலூரில்* உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே.