திருப்புகழ் 9 கருவடைந்து (திருப்பரங்குன்றம்)

தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து  பத்துற்ற  திங்கள் 
வயிறிருந்து  முற்றிப்ப  யின்று 
கடையில்வந்து  தித்துக்கு  ழந்தை  ......  வடிவாகிக் 
கழுவியங்கெ  டுத்துச்சு  ரந்த 
முலையருந்து  விக்கக்கி  டந்து 
கதறியங்கை  கொட்டித்த  வழ்ந்து  ......  நடமாடி 
அரைவடங்கள்  கட்டிச்ச  தங்கை 
இடுகுதம்பை  பொற்சுட்டி  தண்டை 
அவையணிந்து  முற்றிக்கி  ளர்ந்து  ......  வயதேறி 
அரியபெண்கள்  நட்பைப்பு  ணர்ந்து 
பிணியுழன்று  சுற்றித்தி  ரிந்த 
தமையுமுன்க்ரு  பைச்சித்தம்  என்று  ......  பெறுவேனோ 
இரவிஇந்த்ரன்  வெற்றிக்கு  ரங்கி 
னரசரென்றும்  ஒப்பற்ற  உந்தி 
யிறைவன்எண்கி  னக்கர்த்த  னென்றும்  ......  நெடுநீலன் 
எரியதென்றும்  ருத்ரற்சி  றந்த 
அநுமனென்றும்  ஒப்பற்ற  அண்டர் 
எவரும்இந்த  வர்க்கத்தில்  வந்து  ......  புனமேவ 
அரியதன்ப  டைக்கர்த்த  ரென்று 
அசுரர்தங்கி  ளைக்கட்டை  வென்ற 
அரிமுகுந்தன்  மெச்சுற்ற  பண்பின்  ......  மருகோனே 
அயனையும்பு  டைத்துச்சி  னந்து 
உலகமும்ப  டைத்துப்ப  ரிந்து 
அருள்பரங்கி  ரிக்குட்சி  றந்த  ......  பெருமாளே. 
  • கருவடைந்து
    கருவிலே சேர்ந்து
  • பத்துற்ற திங்கள் வயிறிருந்து
    பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து
  • முற்றிப்ப யின்று
    கரு முற்றிப் பக்குவம் அடைந்து
  • கடையில்வந்து தித்து
    கடைசியில் பூமியில் வந்து பிறந்து
  • குழந்தை வடிவாகி
    குழந்தையின் வடிவத்தில் தோன்றி
  • கழுவியங்கெ டுத்து
    குழந்தையை அங்கு கழுவியெடுத்து
  • சுரந்த முலையருந்து விக்க
    சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
  • கிடந்து கதறி
    தரையிலே கிடந்தும், அழுதும்,
  • அங்கை கொட்டித்தவழ்ந்து
    உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும்,
  • நடமாடி
    நடை பழகியும்,
  • அரைவடங்கள் கட்டி
    அரைநாண் கட்டியும்,
  • சதங்கை இடுகுதம்பை
    காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
  • பொற்சுட்டி தண்டை அவையணிந்து
    பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும்,
  • முற்றிக்கி ளர்ந்து வயதேறி
    முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
  • அரியபெண்கள்
    அருமையான பெண்களின்
  • நட்பைப்பு ணர்ந்து
    நட்பைப் பூண்டு,
  • பிணியுழன்று
    நோய்வாய்ப்பட்டு
  • சுற்றித்தி ரிந்த(து) அமையும்
    அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்)
  • உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ
    உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
  • இரவிஇந்த்ரன்
    சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி)
  • வெற்றிக்கு ரங்கினரசரென்றும்
    வெற்றி வானர அரசர்களாகவும்,
  • ஒப்பற்ற உந்தியிறைவன்
    ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன்
  • எண்கி னக்கர்த்த னென்றும்
    கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும்,
  • நெடுநீலன் எரியதென்றும்
    நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
  • ருத்ரற்சி றந்த அநுமனென்றும்
    ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
  • ஒப்பற்ற அண்டர் எவரும்
    ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
  • இந்த வர்க்கத்தில் வந்து
    இன்னின்ன வகைகளிலே வந்து
  • புனமேவ
    இப் பூமியில் சேர்ந்திட,
  • அரியதன்ப டைக்கர்த்த ரென்று
    (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
  • அசுரர்தங்கி ளைக்கட்டை
    அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
  • வென்ற அரிமுகுந்தன்
    வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
  • மெச்சுற்ற பண்பின் மருகோனே
    புகழும் குணம் வாய்ந்த மருமகனே,
  • அயனையும்பு டைத்துச்சி னந்து
    பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து,
  • உலகமும்ப டைத்து
    (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து,
  • பரிந்து
    அன்புடன்
  • அருள்பரங்கி ரிக்குள்
    அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
  • சிறந்த பெருமாளே.
    வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com