தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
தந்தனா தத்தனா ...... தந்ததான
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற
மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
எந்தைபா கத்துறையு ...... மந்தமாது
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.
- விந்துபேதித்த வடிவங்களாய் எத்திசையு
சுக்கில விந்து வெவ்வேறான உருவங்களாய் எல்லாத் திசைகளிலும், - மின்சரா சர்க்குலமும் வந்துலாவி
ஒளிவாய்ந்த அசையும் அசையாப் பொருள் என்ற கூட்டமாய் இவ்வுலகில் தோன்றி காலம் கழித்து, - விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதான் உற்றறியு
பின்பு பிரிந்து போய் உடலை விடுவதை என் மனம் ஆராய்ந்து அறியும். - மிஞ்சநீ விட்டவடிவங்களாலே
இவ்வாறு மிகுதியாக நீ எனக்கு அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து - வந்து நாயிற்கடையன் நொந்து
நான் வந்து நாயினும் கீழ்ப்பட்டவனாக மனம் நொந்து, - ஞானப்பதவி வந்துதா இக்கணமெ யென்றுகூற
ஞான நிலையை இந்தக் கணத்திலேயே வந்து கொடு என்று உன்னிடம் முறையிடுகிறேன். - மைந்தர்தாவிப்புகழ தந்தைதாய் உற்றுருகி
குழந்தைகள் தாவி நின்று புகழ்ந்தால் தாயும் தந்தையும் அம்மொழிகளைக் கேட்டு மனம் உருகி - வந்துசேயைத்தழுவல் சிந்தியாதோ
அக்குழந்தைகளை ஓடிவந்து தழுவிக்கொள்ளும் பான்மையை உன் மனம் சற்று நினைக்கக் கூடாதா? - அந்தகாரத்தில் இடி யென்பவாய் விட்டுவரும்
பேரிருளில் இடி இடிப்பதுபோல் வாய்விட்டுக் கூச்சலிட்டு வருகின்ற, - அங்கிபார்வைப்பறையர் மங்கிமாள
கண்களில் நெருப்புப் பொறி பறக்கும் இழிகுலத்தரான அசுரர் ஒடுங்கி மாண்டுபோக, - அங்கைவேல் விட்டருளி
அழகிய கையிலிருக்கும் வேலைச் செலுத்தி அருளி, - இந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டர் ஏறக்கிருபை
கொண்டபாலா
இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் மீண்டும் குடியேற அருள்புரிந்த குமரனே, - எந்தன் ஆவிக்குதவு சந்த்ரசேர்வைச்சடையர்
என் உயிருக்கு உதவி புரிந்தவரும்*, சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள ஜடையை உடையவரும், - எந்தை பாகத்துறையும் அந்தமாது
என் தந்தையும் ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய பார்வதிதேவி ஆகிய இருவரும் - எங்குமாய் நிற்குமொரு கந்தனூர்
எங்கும் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற கந்தனூரில்**, - சத்திபுகழ் எந்தைபூசித்துமகிழ் தம்பிரானே.
பராசக்தி புகழும் எந்தை பரமசிவன் பூஜித்து மகிழும் தம்பிரானே.



