திருப்புகழ் 891 சதங்கை மணி (பெரும்புலியூர்)

தனந்தனன தானத் தனந்தனன தானத்
தனந்தனன தானத் ...... தனதான
சதங்கைமணி  வீரச்  சிலம்பினிசை  பாடச் 
சரங்களொளி  வீசப்  ......  புயமீதே 
தனங்கள்குவ  டாடப்  படர்ந்தபொறி  மால்பொற் 
சரங்கண்மறி  காதிற்  ......  குழையாட 
இதங்கொள்மயி  லேரொத்  துகந்தநகை  பேசுற் 
றிரம்பையழ  கார்மைக்  ......  குழலாரோ 
டிழைந்தமளி  யோடுற்  றழுந்துமெனை  நீசற் 
றிரங்கியிரு  தாளைத்  ......  தருவாயே 
சிதம்பரகு  மாரக்  கடம்புதொடை  யாடச் 
சிறந்தமயில்  மேலுற்  ......  றிடுவோனே 
சிவந்தகழு  காடப்  பிணங்கள்மலை  சாயச் 
சினந்தசுரர்  வேரைக்  ......  களைவோனே 
பெதும்பையெழு  கோலச்  செயங்கொள்சிவ  காமிப் 
ப்ரசண்டஅபி  ராமிக்  ......  கொருபாலா 
பெரும்புனம  தேகிக்  குறம்பெணொடு  கூடிப் 
பெரும்புலியுர்  வாழ்பொற்  ......  பெருமாளே. 
  • சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட
    கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட,
  • சரங்கள் ஒளி வீசப் புயம் மீதே தனங்கள் குவடு ஆட
    மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட,
  • படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட
    தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட,
  • இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று
    இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி,
  • இரம்பை அழகு ஆர் மைக் குழலாரோடு
    ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன்
  • இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை
    நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது,
  • நீ சற்று இரங்கி இரு தாளைத் தருவாயே
    நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.
  • சிதம்பர குமார கடம்பு தொடை ஆடச் சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே
    சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே,
  • சிவந்த கழுகு ஆடப் பிணங்கள் மலை சாயச் சினந்து அசுரர் வேரைக் களைவோனே
    சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே,
  • பெதும்பை எழு கோலச் செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா
    பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே.
  • பெரும் புனமது ஏகிக் குறம் பெணொடு கூடி பெரும் புலியுர் வாழ் பொன் பெருமாளே.
    பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில்* வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com