திருப்புகழ் 872 மனமெனும் பொருள் (சிவபுரம்)

தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
மனமெ  னும்பொருள்  வானறை  கால்கனல் 
புனலு  டன்புவி  கூடிய  தோருடல் 
வடிவு  கொண்டதி  லேபதி  மூணெழு  ......  வகையாலே 
வருசு  கந்துய  ராசையி  லேயுழல் 
மதியை  வென்றுப  ராபர  ஞானநல் 
வழிபெ  றும்படி  நாயடி  யேனைநி  ......  னருள்சேராய் 
செனனி  சங்கரி  ஆரணி  நாரணி 
விமலி  யெண்குண  பூரணி  காரணி 
சிவைப  ரம்பரை  யாகிய  பார்வதி  ......  அருள்பாலா 
சிறைபு  குஞ்சுரர்  மாதவர்  மேல்பெற 
அசுரர்  தங்கிளை  யானது  வேரற 
சிவனு  கந்தருள்  கூர்தரு  வேல்விடு  ......  முருகோனே 
கனக  னங்கையி  னாலறை  தூணிடை 
மனித  சிங்கம  தாய்வரை  பார்திசை 
கடல்க  லங்கிட  வேபொரு  தேயுகிர்  ......  முனையாலே 
கதற  வென்றுடல்  கீணவ  னாருயி 
ருதிர  முஞ்சித  றாதமு  தாயுணு 
கமல  வுந்திய  னாகிய  மால்திரு  ......  மருகோனே 
தினக  ரன்சிலை  வேளருள்  மாதவர் 
சுரர்க  ளிந்திர  னாருர  காதிபர் 
திசைமு  கன்செழு  மாமறை  யோர்புக  ......  ழழகோனே 
திரும  டந்தையர்  நாலிரு  வோர்நிறை 
அகமொ  டம்பொனி  னாலய  நீடிய 
சிவபு  ரந்தனில்  வாழ்குரு  நாயக  ......  பெருமாளே. 
  • மனமெ னும்பொருள்
    மனம் என்ற ஒரு பொருளுடன்
  • வான் அறைகால் கனல் புனலுடன்புவி கூடியதோர் உடல்
    ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களும் ஒரு தேகம் என்ற
  • வடிவு கொண்டு
    உருவத்தைக் கொண்டு
  • அதிலேபதி மூணெழு வகையாலே
    அதில் (13 ஐ 7 ஆல் பெருக்கிய ) 91 தத்துவ மாற்றங்களாலே* 1
  • வரு சுகந்துயர் ஆசையிலேயுழல்
    ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற
  • மதியை வென்று
    என் புத்தியை நான் ஜெயித்து,
  • பராபர ஞான நல்வழி பெறும்படி
    மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக
  • நாயடியேனை நின் அருள்சேராய்
    நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக.
  • செனனி சங்கரி ஆரணி நாரணி
    உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி,
  • விமலி யெண்குண பூரணி காரணி
    குற்றமற்றவள், எண்குணங்களும்* 2 நிறைந்தவள், காரணமானவள்,
  • சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா
    சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய்,
  • சிறைபுகுஞ் சுரர் மாதவர் மேல்பெற
    சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற,
  • அசுரர் தங்கிளையானது வேரற
    அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய,
  • சிவன் உகந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே
    சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே,
  • கனகன் அங்கையினால் அறை தூணிடை
    இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து
  • மனித சிங்கமதாய்
    நரசிம்ம உருவத்தில்
  • வரை பார்திசை கடல்கலங்கிடவே
    மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி,
  • பொருதே உகிர் முனையாலே
    இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே,
  • கதற வென்றுடல் கீண அவனாருயிர்
    அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை
  • உதிரமுஞ் சிதறாது அமுதாய் உ(ண்)ணு
    ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய
  • கமல வுந்தியனாகிய மால்திரு மருகோனே
    தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே,
  • தினகரன்சிலை வேள் அருள் மாதவர்
    சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள்,
  • சுரர்கள் இந்திரனார் உரகாதிபர்
    தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள்,
  • திசைமுகன்செழு மாமறை யோர்
    பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர்
  • புகழ் அழகோனே
    போற்றிப் புகழ்கின்ற அழகனே,
  • திருமடந்தையர் நாலிருவோர் நிறை
    அஷ்டலட்சுமிகள்* 3 நிறைந்த
  • அகமொடம்பொனின் ஆலய நீடிய
    வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும்
  • சிவபுரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே.
    சிவபுரம்* 4 என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com