திருப்புகழ் 859 இலகு குழைகிழிய (திருவிடைமருதூர்)

தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன ...... தந்ததான
இலகு  குழைகிழிய  வூடு  போயுலவி 
யடர  வருமதன  னூல  ளாவியெதி 
ரிளைஞ  ருயிர்கவர  ஆசை  நேர்வலைபொ  ......  திந்தநீலம் 
இனிமை  கரைபுரள  வாகு  லாவுசரி 
நெறிவு  கலகலென  வாசம்  வீசுகுழ 
லிருளின்  முகநிலவு  கூர  மாணுடைய  ......  கன்றுபோக 
மலையு  மிதழ்பருகி  வேடை  தீரவுட 
லிறுக  இறுகியநு  ராக  போகமிக 
வளரு  மிளகுதன  பார  மீதினில்மு  ......  யங்குவேனை 
மதுர  கவியடைவு  பாடி  வீடறிவு 
முதிர  அரியதமி  ழோசை  யாகவொளி 
வசன  முடையவழி  பாடு  சேருமருள்  ......  தந்திடாதோ 
கலக  அசுரர்கிளை  மாள  மேருகிரி 
தவிடு  படவுதிர  வோல  வாரியலை 
கதற  வரியரவம்  வாய்வி  டாபசித  ......  ணிந்தபோகக் 
கலப  மயிலின்மிசை  யேறி  வேதநெறி 
பரவு  மமரர்குடி  யேற  நாளும்விளை 
கடிய  கொடியவினை  வீழ  வேலைவிட  ......  வந்தவாழ்வே 
அலகை  யுடனடம  தாடு  தாதைசெவி 
நிறைய  மவுனவுரை  யாடு  நீபஎழில் 
அடவி  தனிலுறையும்  வேடர்  பேதையைம  ......  ணந்தகோவே 
அமணர்  கழுவில்விளை  யாட  வாதுபடை 
கருது  குமரகுரு  நாத  நீதியுள 
தருளு  மிடைமருதில்  மேவு  மாமுனிவர்  ......  தம்பிரானே. 
  • இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம்
    விளங்குகின்ற குண்டலத்தைத் தாக்கும்படி அதனிடையே போய்ப் பாய்ந்து நெருங்கி வந்தும், காம சாஸ்திரத்தை ஆராய்ந்து எதிரே வரும் இளைஞர்களின் உயிரைக் கவர்வதற்காகவே விரித்த ஆசை நிறைந்த வலையாக அமைந்தும் உள்ள நீலோற்பலம் போன்ற கண்கள்.
  • இனிமை கரை புரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசு குழல் இருளின் முக நிலவு கூர
    இனிமை என்பது மிக்கெழுந்து கரை புரண்டு ஒழுக, கையில் விளங்கும் வளை வகைகள் கலகல என்று ஒலிக்க, நறு மணம் வீசுகின்ற கூந்தல் என்னும் இருளில் முகம் என்னும் நிலாவொளி மிக்கு எழுந்து விளங்க,
  • மாண் உடை அகன்று போக மலையும் இதழ் பருகி வேடை தீர
    சிறந்த ஆடை விலகிப் போக, எதிர்ப்பட்டு முட்டி மோதும் வாயிதழ் ஊறலை உண்டு காம தாகம் அடங்க,
  • உடல் இறுக இறுகி அநுராக போக மிக வளரும் இளகு தன பாரம் மீதினில் முயங்குவேனை
    விலை மகளிரின் உடலை அழுந்தக் கட்டி அணைத்து, காமப் பற்றால் ஏற்படும் சுகம் நன்றாக வளர்ந்தும், நெகிழ்ச்சியுறும் மார்பின் பாரங்களைத் தழுவும் எனக்கு,
  • மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழோசை ஆக ஒளி வசனம் உடைய வழிபாடு சேரும் அருள் தந்திடாதோ
    இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க, அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான உனது திருவருளைத் தர மாட்டாயோ?
  • கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடு பட உதிர ஓல வாரி அலை கதற
    போர் செய்யும் அசுரர்களின் கூட்டம் மாண்டு அழிய, மேரு மலை தவிடு பொடியாக, ரத்த வெள்ளம் ஓலமிடும் கடலின் அலைகள் பேரொலி செய்ய,
  • வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போகக் கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற
    கோடுகளை உடைய பாம்பைத் தன் வாயினின்றும் விடாது, பசி அடங்கிய இன்பம் கொண்ட, தோகை மயில் மேல் ஏறி வந்து, வேத சன்மார்க்கத்தைப் போற்றும் தேவர்கள் தங்கள் பொன்னுலகுக்குக் குடிபுகச் செய்து,
  • நாளும் விளை கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே
    நாள்தோறும் விளைகின்ற மிகப் பொல்லாத வினை வீழ்ந்தழிய வேலாயுதத்தை ஏவுதற்கு என்று தோன்றிய செல்வமே,
  • அலகையுடன் நட(ன)ம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடு(ம்) நீப
    பேய்களுடன் நடமிடும் தந்தையாகிய சிவபெருமானுடைய காதுகள் நிரம்ப மவுன உபதேசம் செய்தவனே, கடப்ப மாலையை அணிந்தவனே,
  • எழில் அடவி தனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே
    அழகிய காட்டில் வாசம் செய்த வேடர்களின் மகளாகிய வள்ளியை திருமணம் புரிந்த தலைவனே,
  • அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமரகுரு நாத
    சமணர்கள் கழுவில் துள்ளிக் குதிக்க (சம்பந்தராக வந்து) வாதப் போர் கருதிச் செய்த குமரனே, குரு நாதனே,
  • நீதி உளது அருளும் இடை மருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே.
    நீதி உள்ளவற்றை அருளிச் செய்பவனே, திருவிடை மருதூரில் வீற்றிருப்பவனே, சிறந்த முனிவர்களுக்குத் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com