திருப்புகழ் 856 மதியஞ் சத்திரு (திருப்பந்தணை நல்லூர்)

தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன
தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான
மதியஞ்  சத்திரு  நிறைந்த  மாமுக 
மயிலஞ்  சக்கிளி  யினங்க  ளாமென 
மதுரஞ்  செப்பிய  மடந்தை  மேனகை  ......  ரதிபோல 
மருவும்  பொற்குட  மெழுந்த  மாமுலை 
வளர்வஞ்  சிக்கொடி  நடந்த  வாறென 
வருதுங்  கக்கட  லணங்கு  போல்பவர்  ......  தெருவூடே 
நிதமிந்  தப்படி  யிருந்து  வாறவர் 
பொருள்தங்  கப்பணி  கலந்து  போய்வர 
நெறிதந்  திட்டவர்  வசங்க  ளாமென  ......  வுழலாதே 
நிதிபொங்  கப்பல  தவங்க  ளாலுனை 
மொழியும்  புத்திகள்  தெரிந்து  நானுனை 
நிகர்சந்  தத்தமிழ்  சொரிந்து  பாடவு  ......  மருள்தாராய் 
நதிமிஞ்  சச்சடை  விரிந்த  நாயக 
னுமையன்  பிற்செயு  மிகுந்த  பூசனை 
நலமென்  றுட்குளிர்  சிவன்ப  ராபர  ......  னருள்பாலா 
நவகங்  கைக்கிணை  பகர்ந்த  மாமணி 
நதிபங்  கிற்குல  வுகந்து  காபுரி 
நகர்பொங்  கித்தழை  யவந்து  வாழ்வுறு  ......  முருகோனே 
கெதிதங்  கத்தகு  கணங்கள்  வானவர் 
அரிகஞ்  சத்தவர்  முகுந்தர்  நாவலர் 
கிளைபொங்  கக்ருபை  புரிந்து  வாழ்கென  ......  அருள்நாதா 
கெருவம்  பற்றிகல்  விளைந்த  சூரொடு 
தளமஞ்  சப்பொரு  தெழுந்து  தீயுகள் 
கிரவுஞ்  சக்கிரி  வகிர்ந்த  வேலுள  ......  பெருமாளே. 
  • மதி அஞ்சத் திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்சக் கிளி இனங்கள் ஆம் என
    சந்திரன் அஞ்சி நாணும்படியான பொலிவு நிறைந்த அழகிய முகத்துடன், மயிலும் (இவர்களின் சாயல் முன் நமது சாயல் எம்மாத்திரம் என்று) பயப்பட, கிளியின் கூட்டங்கள் போல விளங்கி,
  • மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சிக் கொடி நடந்தவாறு என வரு(ம்)
    இனிமை தரும் பேச்சுக்களைப் பேசும் பெண்களாகிய தேவலோகத்து மேனகை, ரதி என்னும் அரம்பையர்கள் போல, பொருந்தியுள்ள தங்கக் குடம் போன்ற அழகிய மார்பகங்களுடன் விளங்கும், வஞ்சிக் கொடி நடந்து உலவுவது போல் நடந்து வருகின்ற,
  • துங்கக் கடல் அணங்கு போல்பவர் தெரு ஊடே நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்கப் ப(ண்)ணி கலந்து போய் வர நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே
    உயர்ந்த கடலில் தோன்றி எழுந்த லக்ஷ்மி போன்ற அழகினர் தெருவழியாக தினந்தோறும் இவ்விதமாய் இருந்து, வரும் ஆடவர்களுடைய பொருள்களை தம்மிடமே தங்கும்படியாகச் செய்து, அவர்களுடன் கலந்து, போகவும், வரவும் வழி கொடுப்பவர்களின் வசப்பட்டவன் என்று சொல்லும்படியாக நான் திரியாமல்,
  • நிதி பொங்கப் பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள் தாராய்
    (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தருவாயாக.
  • நதி மிஞ்சச் சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா
    கங்கை பொங்கி எழும் சடை விரிந்த தேவன், உமா தேவி அன்போடு செய்த பூஜையை நன்று இது என ஏற்று உள்ளம் குளிர்ந்த சிவன், பராபர மூர்த்தி அருளிய குழந்தையே,
  • நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா ம(ண்)ணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி நகர் பொங்கித் தழைய வந்து வாழ்வுறு முருகோனே
    புதுமை நிறைந்த கங்கை நதிக்கு ஒப்பாகும் என்று சொல்லப்பட்ட மண்ணி ஆற்றின் பக்கத்தில் விளங்குகின்ற கந்துகாபுரி என்னும் திருப்பந்தணைநல்லூர்* என்னும் பதி செல்வம் மேம்பட்டு விளக்கமுறும் முருகனே,
  • கெதி தங்கத் தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர் கிளை பொங்க க்ருபை புரிந்து வாழ்க என அருள் நாதா
    நற்கதி நிலை தம்மிடம் தங்குவதற்கு, பொருந்திய கணங்கள், தேவர்கள், இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், திருமால், புலவர்கள் இவர்களுடைய கூட்டம் சிறப்புற்று வாழ அருள் கூர்ந்து வாழுங்கள் என்று அருளிய நாதனே,
  • கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்சப் பொருது எழுந்து தீ உகள் கிரவுஞ்சக் கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே.
    கர்வம் கொண்டு பகைமை பூண்ட சூரனுடன் அவனுடைய சேனை பயப்படும்படி சண்டை செய்து, கிளம்பி தீ தாவி எழும் கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்திய வேலாயுதத்தைக் கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com