திருப்புகழ் 854 கெண்டைகள் பொரும் (திருப்பந்தணை நல்லூர்)

தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத்
தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான
கெண்டைகள்பொ  ருங்கண்மங்  கையர்மலர்க் 
கொண்டைகள்கு  லுங்கநின்  றருகினிற் 
கெஞ்சுபலு  டன்குழைந்  தமளியிற்  ......  கொடுபோய்வண் 
கெந்தபொடி  யும்புனைந்  துறவணைத் 
தின்பவச  னந்தருந்  தொழிலடுக் 
கின்றமய  லின்படுந்  துயரறப்  ......  ப்ரபைவீசுந் 
தண்டைகள்க  லின்கலின்  கலினெனக் 
கிண்கிணிகி  ணின்கிணின்  கிணினெனத் 
தண்கொலுசு  டன்சிலம்  பசையவுட்  ......  பரிவாகிச் 
சந்ததமும்  வந்திரும்  பரிமளப் 
பங்கயப  தங்களென்  கொடுவினைச் 
சஞ்சலம  லங்கெடும்  படியருட்  ......  புரிவாயே 
தொண்டர்கள்ச  ரண்சரண்  சரணெனக் 
கொம்புகள்கு  குங்குகுங்  குகுமெனத் 
துந்துமிதி  மிந்திமிந்  திமினெனக்  ......  குறுமோசை 
சுந்தரிம  ணஞ்செயுஞ்  சவுரியக் 
கந்தகுற  வஞ்சிதங்  கருவனத் 
துங்கமலை  யும்புரந்  தமரருக்  ......  கிடர்கூரும் 
பண்டர்கள்பு  யங்களும்  பொடிபடக் 
கண்டவப்ர  சண்டகுஞ்  சரியெழிற் 
பைந்தருவ  னம்புரந்  தகழெயிற்  ......  புடைசூழும் 
பந்திவரு  மந்திசெண்  பகமகிற் 
சந்துசெறி  கொன்றைதுன்  றியவனப் 
பந்தணையில்  வந்திடுஞ்  சரவணப்  ......  பெருமாளே. 
  • கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர்க் கொண்டைகள் குலுங்க நின்று
    கெண்டை மீனைப் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மலர் அணிந்த கொண்டைகள் குலுங்கும்படியாக நின்று,
  • அருகினில் கெஞ்சு ப(ல்)லுடன் குழைந்து அமளியில் கொடு போய்
    சமீபத்திலிருந்து தாழ்ந்த குரலுடன், பற்கள் தெரியும்படி குழைந்து சிரித்துப் பேசி, (நாடி வருபவரை) படுக்கையில் கொண்டு போய்,
  • வண் கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து
    நல்ல வாசனைத் தூள்களைப் பூசி, இறுக்க அணைத்து,
  • இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற மயலின் படும் துயர் அற
    இன்பகரமான பேச்சுக்களுடன் கூடிய செயல்களால் உண்டாகின்ற காம மயக்கில் படுகின்ற துன்பம் நீங்க,
  • ப்ரபை வீசும் தண்டைகள் கலின்கலின் கலின் எனக் கிண்கிணி கிணின் கிணின் என
    ஒளி வீசுகின்ற (உனது) காலில் அணிந்த தண்டைகள் கலின் கலின் என்று ஒலி செய்ய, கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய,
  • தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி சந்ததமும் வந்து
    அருள் பாலிக்கும் கொலுசுடன், சிலம்பும் அசைய, திருவுள்ளத்தில் அன்பு கூர்ந்து எப்போதும் (என்முன்) வந்து,
  • இரும் பரிமளப் பங்கயப் பதங்கள் என் கொடு வினைச் சஞ்சல மலம் கெடும்படி அருள் புரிவாயே
    பெருமை தங்கிய, நறு மணம் உள்ள தாமரை போன்ற திருவடிகள் என்னுடைய பொல்லாத வினை, மனக் கவலை, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (இவை யாவும்) அழிந்து போகும்படி அருள் புரிவாயாக.
  • தொண்டர்கள் சரண் சரண் சரண் என கொம்புகள் குகும் குகும் குகும் என
    அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க, ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என்று ஒலி செய்ய,
  • துந்துமி திமிந் திமிந் திமிந் எனக் குறு(கு)ம் ஓசை
    பேரிகை திமிந் திமிந் திமின் என்று அணுகி ஓசை செய்ய,
  • சுந்தரி மணம் செயும் சவுரியக் கந்த
    அழகிய தேவயானையைத் திருமணம் செய்த வல்லமை வாய்ந்த கந்தனே,
  • குற வஞ்சி தங்கு அரு வனத் துங்க மலையும் புரந்து
    குறப் பெண்ணாகிய வள்ளி தங்கியிருந்த அருமையான தினைக் காடு உள்ள பரிசுத்தமான வள்ளி மலையையும் காத்து,
  • அமரருக்கு இடர் கூரும் பண்டர்கள் புயங்களும் பொடிபடக் கண்டவ
    தேவர்களுக்குத் துன்பத்தை மிகவும் விளைவித்த மிண்டர்கள் (அசுரர்கள்) தோள்களும் அறுபட்டுத் தூளாகச் செய்தவனே.
  • ப்ரசண்ட குஞ்சரி எழில் பைந்தரு வனம் புரந்து
    மிகச் சிறப்பு வாய்ந்த தேவயானை (வளர்ந்த) அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தைக் காத்தளித்து,
  • அகழ் எயில் புடை சூழும் பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன
    அகழியும், மதிலும், பக்கத்தில் சூழ்ந்துள்ள, வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்த, செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை (இம் மரங்கள் எல்லாம்) பொருந்திய சோலை சூழ்ந்த
  • பந்தணையில் வந்திடும் சரவணப் பெருமாளே.
    திருப்பந்தணைநல்லூரில்* வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com