தந்த தந்தன தந்தன தந்தன
தந்த தந்தன தந்தன தந்தன
தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்
வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை
மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை
தங்க வெண்டர ளம்பதி யும்பலு
மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர்
கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி
கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங்
கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு
கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை
கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை ...... நம்புவேனோ
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை
சம்பு வின்கும ரன்புல வன்பொரு
கந்த னென்றிடு துந்துமி யுந்துவ
சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ...... விஞ்சவேகண்
டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ
டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட
அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே
அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்
மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே.
- மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும்
மேகம் என்னும்படியான கரிய கூந்தல், பிறை போன்ற அழகிய புருவங்கள் எனப்படும் வில், - கணை அம் கயல் வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து
பார்வை
அம்பு, அழகிய கயல் மீன், வண்டு, தாமரை இவைகளைப் பழித்து, தமது சிறப்பை வெளிக்காட்ட வல்ல கண்கள், - மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம்
பதியும் ப(ல்)லும் மண்டு அலம் திகழும் கமுகு அம் சிறு
கண்ட மாதர்
நாட்டில் உள்ளவர்கள் கலங்கும்படியான காதில் உள்ள அழகிய குண்டலங்கள், பொருந்தியுள்ள வெண்மையான முத்துக்கள் பதித்தாற் போல் பற்கள், நெருங்கிய கலப்பையால் உழுது வளர்ந்த கமுகு போன்ற சிறிய அழகிய கழுத்துடைய பெண்கள், - கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும்
பவளம் பொறி கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி
பேரின்பம் தரும் கிளி என்னும்படியான குரலாகிய புல்லாங்குழல், தாமரை போன்ற மார்பகங்கள் ஆகிய செவ்விய மலையில் பவள மாலை, தேமல், நறு மணம் கமழும் சந்தனம், விளங்குகின்ற ஆடை, வஞ்சிக் கொடி போன்ற இடை இவை துலங்க, - சேரும் கஞ்ச(ம்) மண்டு(ம்) உள் நின்று இரசம் புகு கண்
படர்ந்த இட(ம்) ரம்பை எனும் தொடை கண் கை அம் சரணம்
செயல் வஞ்சரை நம்புவேனோ
பொருந்திய தாமரையின் நிறைந்த, உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட (காம) இன்பம் புகுந்துள்ள இடம், வாழை போன்ற தொடை, கண்கள், கைகள், அழகிய பாதங்கள், செயல்களும் (கூடிய) வஞ்சகம் நிறைந்த விலைமாதர்களை நான் நம்புவேனோ? - சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம
டுண்டுடு தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்குதாரை
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி இவ்வாறு ஒலித்த சங்குகளும், தாரைகளும், தப்பட்டைகளும், - சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும்
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு
சிவபெருமானின் மகன், தமிழில் புலமை படைத்தவன், சண்டை செய்ய வல்ல கந்தன் என்றெல்லாம் ஒலிக்கும் பேரிகைகளும், கொடிகளும், அவ்விடத்தில் பிரகாசிக்கும் குடைகளும், திசைகளில் எல்லாம் மிகுந்து பொலியவே, அக்காட்சியைக் கண்டு, - அஞ்சு வஞ்ச அசுரன் திரளும் குவடு அன்று அடங்கலும்
வெந்து பொரிந்திட அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற
வேளே
பயப்படும்படி வஞ்சகம் உள்ள சூரனுடைய சேனைகளும், கிரவுஞ்ச மலையும் ஆக அன்று எல்லாமும் வெந்து கரியாக, தேவர்களும், இந்திரனும் அடைக்கலம் என்று உன் திருவடியில் சரணடைய வெற்றி கொண்ட முருகு வேளே, - அம்புயம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில்
மங்கையொடு அன்புடன் அண்டரும் தொழு(ம்) செந்திலில்
இன்புறு(ம்) தம்பிரானே.
தாமரையும், குளிர்ந்த வாழையும் நிறைந்துள்ள மலை நிலத்துப் பெண்ணாகிய வள்ளி, அழகிய விண்ணுலக மங்கை (தேவயானை ஆகிய) இவர்கள் இருவரோடு அன்புடன் தேவர்களும் தொழுகின்ற திருச்செந்தூரில் இன்புறுகின்ற தம்பிரானே.