தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன ...... தனதான
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு ...... விலைமாதர்
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து ...... தமியேனும்
மயலா கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குண ...... மதுமாற
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத ...... மருள்வாயே
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை ...... யிடுவோனே
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி ...... யுறைவோனே
குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
- அயில் ஆர் மைக் கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு
விலைமாதர்
வேல் போன்ற, மை பூசிய, விஷம் கொண்ட கண்களை உடையவர்கள், பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்கள் விரும்புகின்ற வேசிகள், - அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல்
செய்து தமியேனும்
படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே வஞ்சிப்பவர்கள், அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து தன்னந்தனியனான அடியேனும் - மயலாகித் திரிவது தான் அற்றிட மல மாயைக் குணம் அது
மாற
மயக்கம் கொண்டவனாகத் திரிகின்ற செய்கை ஒழிந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் தீய குணம் ஒழிந்து போக, - மறையால் மிக்க அருள் பெறவே அற்புத மது மாலைப் பதம்
அருள்வாயே
வேதங்களை நான் ஓதி ஓதி, நின் திருவருளைப் பெறுமாறு, அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட திருவடியைத் தந்து அருளுக. - கயிலாயப் பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை
இடுவோனே
கயிலை மலையை உடையவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல் நிலையில் நின்று உபதேசித்தவனே, - கடல் ஓடிப் புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு
திறலோனே
கடலில் ஓடிப் புகுந்த பழைய சூரன் அழிபட, ஒளி பொருந்திய வேலை விட்ட பராக்கிரமசாலியே, - குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி
உறைவோனே
குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள குடவாயில்* என்னும் நகரில் உறைபவனே, - குற மாதைப் புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர்
பெருமாளே.
குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்த வல்லமை உடையவனே, ஞான மூர்த்தியே, குறைவுபடாத உண்மைத் தவ நிலையை உடையார் தம் பெருமாளே.