திருப்புகழ் · 830விழுதாதெனவே (நாகப்பட்டினம்)
vizhudhAdhenavE
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான
விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே ...... புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார் ...... மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா ...... துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமே ...... தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமே ...... தருதேவா
சுரர்பூபதியே கருணா லயனே
சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா ...... ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- விழுதா தெனவே கருதா துடலை
(இறைவனருளால்) விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல், - வினைசேர் வதுவே புரிதாக
வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விரும்புவதாக, - விருதா வினிலே
வாழ்நாளை வீணாக்கி, - உலகா யதமேலிடவே
(தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் புத்தி மேலிட, - மடவார் மயலாலே
பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து, - அழுது ஆகெடவே அவமாகிட
அழுதும், கெட்டுப்போயும், கேவலமாகி - நாளடைவே கழியாது
வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல், - உனையோதி
உன்னைப் புகழ்ந்து துதித்து, - அலர்தா ளடியே னுறவாய்
மலர்ந்த தாமரை போன்ற உன் திருவடிகளே எனக்கு உறவாக - மருவோரழியா வரமே தருவாயே
பொருந்திய ஒப்பற்ற அழியாத வரம் நீ தந்தருள்வாயாக. - தொழுதார் வினை
தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் - வே ர்யோ டறவே
வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக - துகள்தீர் பரமே தருதேவா
குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவனே, - சுரர்பூபதியே
தேவர்களுக்கு அரசனே, - கருணா லயனே
கருணைக்கு இருப்பிடமானவனே, - சுகிர்தா அடியார் பெருவாழ்வே
புண்ணியனே, அடியார்களின் பெருவாழ்வே, - எழுதா மறைமா முடிவே
எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவனே, - வடிவேலிறைவா
கூரிய வேலை ஏந்திய இறைவனே, - எனையாளுடையோனே
என்னை ஆட்கொண்டுள்ளவனே, - இறைவா எதுதா அதுதா
இறைவனே, நீ எது தரவேண்டுமோ அதைத் தந்தருள். - தனையே இணைநா கையில்
தனக்குத் தானே இணையாகும் நாகப்பட்டினத்தில் - வாழ் பெருமாளே.
வீற்றிருக்கின்ற பெருமாளே.



