திருப்புகழ் 824 ஒருவழிபடாது (சோமநாதன்மடம்)

தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான ...... தனதான
ஒருவழிப  டாது  மாயை  யிருவினைவி  டாது  நாளு 
முழலுமநு  ராக  மோக  ......  அநுபோகம் 
உடலுமுயிர்  தானு  மாயு  னுணர்விலொரு  காலி  ராத 
வுளமுநெகிழ்  வாகு  மாறு  ......  அடியேனுக் 
கிரவுபகல்  போன  ஞான  பரமசிவ  யோக  தீர 
மெனமொழியும்  வீசு  பாச  ......  கனகோப 
எமபடரை  மோது  மோன  வுரையிலுப  தேச  வாளை 
யெனதுபகை  தீர  நீயும்  ......  அருள்வாயே 
அரிவையொரு  பாக  மான  அருணகிரி  நாதர்  பூசை 
அடைவுதவ  றாது  பேணும்  ......  அறிவாளன் 
அமணர்குல  கால  னாகும்  அரியதவ  ராஜ  ராஜன் 
அவனிபுகழ்  சோமநாதன்  ......  மடமேவும் 
முருகபொரு  சூரர்  சேனை  முறியவட  மேரு  வீழ 
முகரசல  ராசி  வேக  ......  முனிவோனே 
மொழியுமடி  யார்கள்  கோடி  குறைகருதி  னாலும்  வேறு 
முனியஅறி  யாத  தேவர்  ......  பெருமாளே. 
  • ஒருவழிபடாது
    ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல்,
  • மாயை யிருவினை விடாது
    மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல்,
  • நாளும் உழலும்
    தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற
  • அநுராக மோக அநுபோகம்
    காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு,
  • உடலுமுயிர் தானுமாய்
    என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு,
  • உனுணர்விலொரு காலி ராத
    நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத
  • உளமுநெகிழ்வாகு மாறு
    என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு
  • அடியேனுக்கு இரவுபகல் போன ஞான பரமசிவ யோக
    அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான்
  • தீரமெனமொழியும்
    தைரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும்,
  • வீசு பாச கனகோப எமபடரை
    பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை
  • மோது மோன வுரையில்
    மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான
  • உப தேச வாளை
    ஞானோபதேசம் என்ற வாளை
  • எனதுபகை தீர நீயும் அருள்வாயே
    எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக.
  • அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை
    தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை
  • அடைவு தவறாது பேணும் அறிவாளன்
    ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும்,
  • அமணர்குல காலனாகும்
    சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும்,
  • அரியதவ ராஜராஜன்
    அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும்,
  • அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக
    இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே,
  • பொரு சூரர் சேனை முறிய
    போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும்,
  • வட மேரு வீழ
    வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும்,
  • முகரசல ராசி வேக முனிவோனே
    சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே,
  • மொழியுமடியார்கள் கோடி குறைகருதினாலும்
    உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும்,
  • வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே.
    அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com