தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன ...... தனதான
பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூணேர் தோளா சுரமுக கனசபை
நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.
- பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ
பாலோ, தேனோ, பலாப் பழத்தில் உள்ள சுளைதானோ? - வானோர் அமுது கொல் கழை ரச பாகோ
தேவர்கள் உண்ணும் அமுதம்தானோ, கரும்பு ரச வெல்லப் பாகோ? - ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞானப் பாலோ
ஊன் உருகத் தேவாரம் பாடிய மகன் திருஞான சம்பந்தர் உண்ணும்படி (உமா தேவியார்) அருளிய ஞானப் பால்தானோ? - வேறோ மொழி என
வேறு ஏதாவதோ ஒப்புரைக்கத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும், - அடு கொடு வேலோ கோலோ விழி என
கொல்லுதலைக் கொண்ட வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும், - முகம் அது பானோ வான் ஊர் நிலவு கொல் என
முகம் சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும், - மகள் மகிழ்வேனை
பெண்களிடம் மகிழ்ச்சி கொள்ளும் நான் - நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ
பல உருவமும் கொண்ட உருவத்தனே, தாமரை போன்ற ஆறு முக ஒளியே, அல்லது வேறு எதுவோ, - மா தோம் எனது அகம் வளர் ஒளி
பெரிய குற்றம் கொண்ட என்னுடைய மனத்தில் வளர்கின்ற ஜோதியே, - நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி
நானோ நீயோ பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு ஜோதி மயமானது, - நாடோ வீடோ
அது நாடுதானோ அல்லது மோட்ச வீடோ? - நடு மொழி என நடு தூண் நேர் தோளா
நடு நிலைமையான உண்மை மொழியை நிலை நிறுத்தியவனே, நடுவில் உள்ள தூணுக்குச் சமமான தோள்களை உடையவனே, - சுர முக கன சபை நாதா
தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதனே, - தாதா என உருகிட அருள் புரிவாயே
கொடை வள்ளலே என்று மனம் உருகுமாறு மீண்டும் மீண்டும் வேண்டினவர்களுக்குத் திருவருள் புரிவோனே, - மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா
காதல் பூண்டவராக தேவர்கள் பூமாரி பொழிய பூமியில் அவதாரம் செய்தவனே, - சூரா என முநிவர்கள் புகழ் மாயாரூபா
சூரனே என முனிவர்கள் புகழும் மாயா ரூபனே, - அரகர சிவசிவ என ஓதா
அரகர சிவசிவ என்று உன்னை ஓதாமல், - வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல்
வாதாடி நின்ற அவுணர்களும், அவர்கள் ஊரில் இருந்தவர்களும், அலை கடலும் - கோ கோ கோ கோ என மலை வெடி பட
கோகோ என்று அலறவும், (கிரவுஞ்சமும், ஏழு குலமலைகளும்) வெடிபட்டுப் பொடியாகவும், - வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே
வாளாலும், வேலாலும் அவர்களை அழியச்செய்து அருளிய முருகனே, - சூலாள் மாலாள் மலர் மகள் கலைமகள்
சூலம் ஏந்தியவளான துர்க்கை, திருமாலுக்கு உரியவளான பூ மகளாகிய லக்ஷ்மி, சரஸ்வதி, - ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய தோடாள்
இவர்கள் ஓதித் துதிக்கும் சீர்படைத்தவள், கதிர் வீசும் நிலவின் ஒளிகொண்ட தோடு என்னும் அணிகலனை அணிபவள், - கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா
மலை போன்ற இரண்டு மார்பகங்களை உடைய உமா தேவியார் முன்பு அருளிய குழந்தையே, - தூயார் ஆயார் இதுசுக சிவபத
பரிசுத்தமானவர்களும், உன்னைத் தியானிப்பவர்களும் இந்தத் திருவாரூர் வாழ்வே சுகமான சிவ பத வாழ்வு, - வாழ்வாம் ஈனே வதிவம் எனு(ம்) உணர்வொடு
இங்கேயே தங்கி வாழ்வோம், என்னும் ஞான உணர்ச்சியோடு - சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே.
வந்து சூழ்கின்ற, சிறப்புள்ள திருவாரூரில்* சேர்ந்துள்ள தேவர்களின் பெருமாளே.



