திருப்புகழ் 810 தலை நாளில் பதம் (வழுவூர்)

தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலைநா  ளிற்பத  மேத்தி  யன்புற 
வுபதே  சப்பொரு  ளூட்டி  மந்திர 
தவஞா  னக்கட  லாட்டி  யென்றனை  ......  யருளாலுன் 
சதுரா  கத்தொடு  கூட்டி  யண்டர்க 
ளறியா  முத்தமி  ழூட்டி  முண்டக 
தளிர்வே  தத்துறை  காட்டி  மண்டலம்  ......  வலமேவும் 
கலைசோ  திக்கதிர்  காட்டி  நன்சுட 
ரொளிநா  தப்பர  மேற்றி  முன்சுழி 
கமழ்வா  சற்படி  நாட்ட  முங்கொள  ......  விதிதாவிக் 
கமலா  லைப்பதி  சேர்த்து  முன்பதி 
வெளியா  கப்புக  ஏற்றி  யன்பொடு 
கதிர்தோ  கைப்பரி  மேற்கொ  ளுஞ்செயல்  ......  மறவேனே 
சிலைவீ  ழக்கடல்  கூட்ட  முங்கெட 
அவுணோ  ரைத்தலை  வாட்டி  யம்பர 
சிரமா  லைப்புக  வேற்ற  வுந்தொடு  ......  கதிர்வேலா 
சிவகா  மிக்கொரு  தூர்த்த  ரெந்தையர் 
வரிநா  கத்தொடை  யார்க்கு  கந்தொரு 
சிவஞா  னப்பொரு  ளூட்டு  முண்டக  ......  அழகோனே 
மலைமே  வித்தினை  காக்கு  மொண்கிளி 
யமுதா  கத்தன  வாட்டி  யிந்துள 
மலர்மா  லைக்குழ  லாட்ட  ணங்கிதன்  ......  மணவாளா 
வரிகோ  ழிக்கொடி  மீக்கொ  ளும்படி 
நடமா  டிச்சுரர்  போற்று  தண்பொழில் 
வழுவூர்  நற்பதி  வீற்றி  ருந்தருள்  ......  பெருமாளே. 
  • தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள் ஊட்டி
    வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து,
  • மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால்
    சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால்
  • உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி
    உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி,
  • முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும்
    முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில்,
  • கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி
    இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து,
  • முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி
    முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து,
  • கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி
    மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து,
  • அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல் மறவேனே
    அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன்.
  • சிலை வீழக் கடல் கூட்டமும் கெட
    கிரெளஞ்ச மலை வீழவும், கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும்,
  • அவுணோரைத் தலை வாட்டி அம்பர சிர மாலைப் புக ஏற்றவும் தொடு கதிர்வேலா
    அசுரர்களின் தலைகளை அழித்து, ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும் செலுத்திய ஒளிமயமான வேலனே,
  • சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாகத் தொடையார்க்கு
    சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என் தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு,
  • உகந்து ஒரு சிவ ஞானப் பொருள் ஊட்டும் முண்டக அழகோனே
    மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே,
  • மலை மேவித் தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆகத் தன வாட்டி
    வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள்,
  • இந்துளம் மலர் மாலைக் குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா
    கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக் கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே,
  • வரி கோழிக் கொடி மீக் கொளும்படி நடமாடி
    நீண்ட கோழிக் கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும் குளிர்ந்த சோலைகளை உடைய
  • சுரர் போற்று(ம்) தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே.
    வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com