திருப்புகழ் 81 புகரப் புங்க (திருச்செந்தூர்)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான
புகரப்  புங்கப்  பகரக்  குன்றிற் 
புயலிற்  றங்கிப்  ......  பொலிவோனும் 
பொருவிற்  றஞ்சச்  சுருதிச்  சங்கப் 
பொருளைப்  பண்பிற்  ......  புகல்வோனும் 
திகிரிச்  செங்கட்  செவியிற்  றுஞ்சத் 
திகிரிச்  செங்கைத்  ......  திருமாலும் 
திரியப்  பொங்கித்  திரையற்  றுண்டுட் 
டெளிதற்  கொன்றைத்  ......  தரவேணும் 
தகரத்  தந்தச்  சிகரத்  தொன்றித் 
தடநற்  கஞ்சத்  ......  துறைவோனே 
தருணக்  கொங்கைக்  குறவிக்  கின்பத் 
தையளித்  தன்புற்  ......  றருள்வோனே 
பகரப்  பைம்பொற்  சிகரக்  குன்றைப் 
படியிற்  சிந்தத்  ......  தொடும்வேலா 
பவளத்  துங்கப்  புரிசைச்  செந்திற் 
பதியிற்  கந்தப்  ......  பெருமாளே. 
  • புகரப் புங்கப் பகரக் குன்றில்
    புள்ளிகளை உடையதும் தூய்மையானதும் அழகியதுமான மலையை ஒத்த ஐராவத யானையின் மேலும்
  • புயலிற் றங்கிப் பொலிவோனும்
    மேகத்தின் மேலும் தங்கிப் பொலிகின்ற தேவேந்திரனும்,
  • பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளை
    இணையற்றதும், எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமானதும் ஆகிய வேதத் தொகுப்புகளின் பொருளை
  • பண்பிற் புகல்வோனும்
    முறையாக மொழிபவராகிய பிரமதேவனும்,
  • திகிரிச் செங்கட் செவியில் துஞ்ச
    மலை போன்றதும், செம்மைப் பண்புடையதுமான ஆதிசேஷன் மீது துயின்ற
  • அத்திகிரிச் செங்கைத் திருமாலும்
    அந்தச் செங்கையில் சக்ராயுதத்தை ஏந்திய நாராயணமூர்த்தியும்,
  • திரியப்
    தமக்கு இந்த உபதேசம் கிடைக்கவில்லையே என்று இங்கும் அங்கும் திரிந்திடவும்,
  • பொங்கித் திரையற்று உண்டு
    உவகை பொங்கி, உள்ளத்தில் எண்ண அலைகள் நீங்கி, சிவானுபவத்தை உட்கொண்டு,
  • உள்தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்
    என் உள்ளம் தெளியுமாறு ஒரு மொழியை உபதேசித்து அருள வேண்டும்.
  • தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி
    தகராகாசமாக இருந்து* அழகிய வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி,
  • தடநற் கஞ்சத் துறைவோனே
    அகன்ற நல்லிடமான இதயக் கமலத்தில் வீற்றிருப்பவனே,
  • தருணக் கொங்கைக் குறவிக்கு
    இளமையான மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு
  • இன்பத்தையளித்து அன்புற்று அருள்வோனே
    பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே,
  • பகரப் பைம்பொற் சிகரக் குன்றை
    ஒளியுடைய பசும்பொற் சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை
  • படியிற் சிந்தத் தொடும்வேலா
    இந்தப் பூமியின் கண் பொடியாகுமாறு தொடுத்தருளிய வேலாயுதனே,
  • பவளத் துங்கப் புரிசை
    பவளம் போன்று சிவந்த தூய மதில்கள் சூழ்ந்த
  • செந்திற்பதியிற் கந்தப் பெருமாளே.
    திருச்செந்தூர்த் தலத்தில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com