தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
- எந்தன்சடல அங்கம் பல பங்கம்படு
எனது உடலாகிய உறுப்பு பலவகையான துன்பங்களில் படும் - தொந்தங்களை யென்றுந்துயர்
தொடர்புகள், என்றும் உள்ள துயரங்கள் யாவும் - பொன்றும்படி யொருநாளே
ஒழியும்படியான நாள் ஒன்று உண்டோ? - இன்பந்தரு செம்பொன்கழலுந்தும்
இன்பத்தைத் தரும் செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த - கழல் தந்தும்பினை யென்றும்படி
திருவடிகளைத் தந்து பின்பு எப்போதும் போல - பந்தங்கெட மயிலேறி வந்தும்
என் பாச பந்தங்கள் அழிய நீ மயில் ஏறி வந்தும், - பிரசண்டம் பகிரண்டம் புவியெங்கும்
வீரத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் எவ்விடத்தும் - திசை மண்டும்படி நின்றுஞ்சுடரொளிபோலும்
திசைகளெல்லாம் நிறையும்படி ஜோதி ஸ்வரூபமாக நின்றும், (அவ்வாறு நீ நிற்பதனால்) - வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்
வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினனும், - துகளென்றுங்கொளும் வண்டன்
குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும், - தமி யன்றன்பவம் ஒழியாதோ
தனியேனுமாகிய எனது பிறப்பு நீங்காதோ? - தந்தந்தன திந்திந்திமி யென்றும்
(அதே ஓசை) - பல சஞ்சங்கொடு
சஞ் சஞ்சென்ற பல ஓசைகளுடனும், - தஞ்சம்புரி கொஞ்சுஞ் சிறு மணியாரம்
அபயம் அளிக்கிறேன் என்று சொல்வது போலக் கொஞ்சும் ஒலியுள்ள சின்ன மணிமாலைகளின் - சந்தந்தொனி கண்டும்
சந்த ஒலியைக் கேட்டும், - புயலங்கன்சிவனம்பன்பதி சம்புந்தொழ நின்றும்
மேகவண்ணன் திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும், - தினம் விளையாடும்
அடியார்களின் உள்ளத்தில் தினந்தோறும் விளையாடுகின்ற - கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழும்
கந்தனே, குகனே, எந்தன் குருவே என்றெல்லாம் தொழுத - அன்பன்கவி கண்டுய்ந்திட
அன்பன் நக்கீரனது பாடலைக் கேட்டு அவன் அடைபட்ட குகையினின்றும், பூதத்தினின்றும் நக்கீரன் பிழைத்து உய்யுமாறு - அன்றன்பொடு வருவோனே
அன்றொருநாள் அவனது முன்னிலையில் அன்போடு வந்தவனே, - கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்
கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க - புனல் தங்குஞ்சுனை
நீர் உள்ள சுனைகள் விளங்கும் - கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே.
கந்தன்குடி* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.