தனனத்த தான தனனத்த தான
தனனத்த தான ...... தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை ...... மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை ...... யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ ...... அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி ...... யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு ...... முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் ...... மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு ...... பெருமாளே.
- கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரும்பு தரும் முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை, - கரிமுத்து மாலை
யானை தரும் முத்தாலான மாலை, - மலைமேவுங் கடிமுத்து மாலை
மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, - வளைமுத்து மாலை
சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை, - கடல்முத்து மாலை
கடலில் பெறப்படும் முத்தாலான மாலை, - அரவீனும் அழல்முத்து மாலை
பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை, - இவைமுற்று மார்பின் அடைவொத்து உலாவ
இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய, - அடியேன்முன் அடர்பச்சை மாவில்
அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில் - அருளிற்பெணோடும் அடிமைக்கு ழாமொடு அருள்வாயே
இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்து அருள் புரிவாயாக. - மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மேகம் போன்ற நிறத்தை உடைய ஜோதி உமை, குயிலும் கிளியும் போன்று - மழலைச்சொல் ஆயி யெமையீனு
மழலை மொழி பேசும், எம்மை ஈன்ற, தாய், - மதமத்த நீல களநித்த நாதர்
பொன் ஊமத்தைமலரை (ஜடையில்) அணிந்தவரும், நீல நிறம் கொண்ட கழுத்தை உடையவரும், என்றும் அழியாது இருப்பவருமான தலைவர் சிவபிரான் - மகிழ்சத்தி யீனு முருகோனே
மகிழ்கின்ற சக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகனே, - செழுமுத்து மார்பின் அமுதத்தெய்வானை
செழிப்புள்ள முத்துமாலை பூணும் மார்பை உடைய, அமுதமயமான தேவயானை, - திருமுத்தி மாதின் மணவாளா
மேலான முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளனே, - சிறையிட்ட சூரர் தளைவெட்டி
சிறையில் தேவர்களை வைத்த சூரர்கள் அவர்களுக்குப் பூட்டிய விலங்கைத் தறித்து எறிந்தவனே, - ஞான திருமுட்ட மேவு பெருமாளே.
ஞானனே, திருமுட்டம்* என்ற தலத்தில் அமர்ந்த பெருமாளே.