தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான
கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக்
களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
கருதி வைத்தவைப் ...... பவைசேரத்
தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச்
சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
தருணி கட்ககப் ...... படலாமோ
பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன்
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
திருவ ரத்துறைப் ...... பெருமாளே.
- கறுவி மை க(ண்) இட்டு இனிது அழைத்து இயல் கவி
சொ(ல்)லிச் சிரித்து உறவாடி
கோபம் காட்டி மையைக் கண்களில் இட்டு, அன்புடனே அழைத்து, இயல் தமிழ்ப் பாக்களைச் சொல்லிச் சிரித்து உறவு கூறி விளையாடி, - களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த
வைப்பு அவை சேர
களவு வித்தைகளைக் கொண்டு மனதை உருகச் செய்து, முன்னதாகவே திட்டமிட்டு, சேமித்து வைத்த பொருள்கள் எல்லாம் தம்மைச் சேரும்படி, - தறு க(ண்)ணில் பறித்து இரு கழுத்து உறத் தழுவி நெக்கு
நெக்கு உயிர் சோர
கொடுமை காட்டி அபகரித்து, இருவர் கழுத்தும் ஒன்றாகும்படி அணைத்து, நெகிழ்ந்து போய் உயிரும் சோரும்படி, - சயன மெத்தையில் செயல் இழக்கும் இத் தருணிகட்கு
அகப்படலாமோ
படுக்கை மெத்தையில் செய்வது இன்னது என்று தெரியாத வகையில் செயல் அழிக்கின்ற இந்த இளம் பெண்களிடையே அகப் படலாமோ? - பிறவியை தணித்து அருளும் நிட்களப் பிரம சித் சுகக் கடல்
மூழ்கும்
பிறவிப் பிணியைத் தொலைத்து அருளக் கூடிய உருவமில்லாத, முழு முதற் பொருளான ஞானானந்தக் கடலில் மூழ்கும் - பெரு முனித் திரள் பரவு செய்ப்பதிப் ப்ரபல கொச்சையில்
சதுர் வேதச் சிறுவ
பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, கொச்சையில் (சீகாழியில்*) நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே, - நிற்கு அருள் கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து
அருள் ஈசன்
உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும் - செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத் துறைப்
பெருமாளே.
பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்*** வாழும் பெருமாளே.