தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன ...... தந்ததான
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்கைமூழ்கி
மதித்த பூதர மாமாம னோலயர்
செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராவொ டேகலை
பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும்
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங்
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.
- மதிக்கு(ம்) நேர் என்னும் வாள் முகம் வான் மக(கா) நதிக்கு
மேல் வரு(ம்) சேல் என்னும் நேர் விழி
சந்திரனுக்கு ஒப்பானது என்று சொல்லக் கூடிய ஒளி பொருந்திய முகம், சிறந்த பெரிய கங்கை ஆற்றில் உலாவும் சேல் மீன் என்று சொல்லும்படியான கண்கள், - மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி
நறு மணம் வீசும் நீண்ட கூந்தல் இவைகள் உடைய, அழகிய (விலை) மாதர்களுடைய இரண்டு மார்பகங்களில் முழுகி, - மதித்த பூதரம் ஆம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்
தோறுமே
மதிப்பு வைத்திருந்த மலைகளே இவை ஆகும் என்று அவைகளிலே மனம் வசப்பட்டவனாய், பெருமிதம் கொண்டு அவற்றின் மேல் விழுந்து தினமும், - மிக வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன்
மிக நன்றாக வடித்தெடுக்கப்பட்ட தேன் போன்ற மொழியும் வாயிதழ் ஊறலுமே அனுபவிக்கின்ற ஒரு பொருளாகிய நாய் போன்ற அடியேன், - பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீரா ஓடே
கலை பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு
காதும்
சிலம்புகள் சூழ்ந்துள்ள சீரான பாதங்களாகிய சிறந்த மலர்களும், ஆயுதங்களில் ஒன்றாகப் பொருந்திய உடைவாளும், ஒளி கொண்ட பருத்த தோள்களும், பன்னிரண்டு தோடுகளாகிய காதணிகள் விளங்கும் செவிகளும், - பணிக் கலாபமும் வேலோடு சேவலும் வடிக் கொள் சூலமும்
வாள் வீசு நீள் சிலை படைத்த வாகையும் நாடாது பாழில்
மயங்கலாமோ
பாம்பை அடக்கும் மயிலும், வேலும், சேவலும், கூர்மையான சூலாயுதமும், ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியையும் விரும்பித் தியானிக்காது, பாழான எண்ணங்களில் நான் மயக்கம் கொள்ளலாமோ? - கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர்
தேரோடுமே கரி கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச
வேலா
கொதித்து மேல் எழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள சேனைகளைப் பொடியாக்கியும், குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் (இவைகளைக்) கலக்கியும், ஊர்களையும், நகரங்களையும் நெருப்பு எரியும்படியும் செலுத்திய வஞ்சம் கொண்ட வேலனே, - களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மேலே
மேவி மூளைகள் கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட
வீரா
மகிழ்ச்சி கொண்ட பேய்க் கூட்டங்களும், பெரிய காளியும், பெருங் கழுகுகளும் சேர்ந்து, ரணகளத்தில் திரண்டு கிடக்கும் பிணங்களின் மேல் விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்ற பூதங்களோடு பாடி ஆடுதலைப் பார்த்த வீரனே, - குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு
ஊடாடி வாழை கொள்குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு
போகமும்
குரங்குகள் குதித்து மேலே உள்ள குலைகளைக் குலைத்து, நீண்ட கமுக மரங்களிடையே ஊடாடுவதால் (அக் கமுகங் குலைகள் அறுபட்டு) வாழைக் குலைகள் மேல் விழும்படியான அழகு நிறைந்த செழுமையும், - வஞ்சி தோயும் குளத்தில் ஊறிய தேன் ஊறல் மா துகள்
குடித்து உலாவியெ சேலோடு
பெண்கள் குளிக்கும் குளத்தில் ஊறிய (மலர்களது) தேன்களின் சாரத்தையும், சிறந்த மகரந்தங்களையும் பருகி உலாவிய சேல் மீன்களும் நிறைந்த - மாணி கொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழு(ம்)
தம்பிரானே.
திருமாணிக்குழி* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே.