திருப்புகழ் 728 அடல்வடி வேல்கள் (திருவாமாத்தூர்)

தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான
அடல்வடி  வேல்கள்  வாளிக  ளவைவிட  வோடல்  நேர்படு 
மயில்விழி  யாலு  மாலெனு  ......  மதவேழத் 
தளவிய  கோடு  போல்வினை  யளவள  வான  கூர்முலை 
யதின்முக  மூடு  மாடையி  ......  னழகாலுந் 
துடியிடை  யாலும்  வாலர்கள்  துயர்வுற  மாய  மாயொரு 
துணிவுட  னூடு  மாதர்கள்  ......  துணையாகத் 
தொழுதவர்  பாத  மோதியுன்  வழிவழி  யானெ  னாவுயர் 
துலையலை  மாறு  போலுயிர்  ......  சுழல்வேனோ 
அடவியி  னூடு  வேடர்க  ளரிவையொ  டாசை  பேசியு 
மடிதொழு  தாடு  மாண்மையு  ......  முடையோனே 
அழகிய  தோளி  ராறுடை  அறுமுக  வேளெ  னாவுனை 
அறிவுட  னோது  மாதவர்  ......  பெருவாழ்வே 
விடையெறு  மீசர்  நேசமு  மிகநினை  வார்கள்  தீவினை 
யுகநெடி  தோட  மேலணை  ......  பவர்மூதூர் 
விரைசெறி  தோகை  மாதர்கள்  விரகுட  னாடு  மாதையில் 
விறல்மயில்  மீது  மேவிய  ......  பெருமாளே. 
  • அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும்
    வலிமை வாய்ந்த கூரிய வேல்கள், அம்புகள் ஆகியவற்றைக் காட்டிலும் ஓடிப்பாய்வதில் நன்கு தேர்ந்த கூர்மையான கண்களாலும்,
  • மால் எனும் மத வேழத்து அளவிய கோடு போல் வினை அளவு அளவான கூர் முலை
    காம மயக்கம் எனப்பட்ட மதயானையின் இடத்துள்ள தந்தம் போன்றதும், வினையின் அளவே அளவாகக் கொண்டதுமான, மிக்கெழுந்த மார்பகத்தாலும்,
  • அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் துடி இடையாலும் வாலர்கள் துயர் உற
    அதன் தோற்றத்தை மூடி மறைக்கும் ஆடையின் அழகாலும், உடுக்கை போன்ற இடையாலும், வாலிபர்கள் துயரம் அடைய
  • மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாகத் தொழுது அவர் பாதம் ஓதி
    மாய வித்தையுடனும் ஒப்பற்ற தைரியத்துடனும் பிணங்குகின்ற பொது மகளிரைத் துணையாகக் கொண்டு, அவர்களை வணங்கி, அவர்களுடைய பாதங்களைப் புகழ்ந்து,
  • உன் வழி வழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ
    உன்னுடைய பரம்பரையில் வந்தவன் நான் என்று கூறி, வெகு தூரம் உயர்ந்து எழும் அலையில் பட்டு அலமந்து போகும் விளக்குமாற்றுக் குச்சி போல் உயிர்ச் சுழற்சி உறுவேனோ?
  • அடவியின் ஊடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே
    காட்டினுள்ளே இருந்த வேடர்களின் பெண்ணான வள்ளியுடன் உன் காதலைத் தெரிவித்துப் பேசும் பேச்சையும், அவளுடைய திருவடிகளைத் தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தையும் உடையவனே,
  • அழகிய தோள் இராறு உடை அறுமுக வேள் எ(ன்)னா உனை அறிவுடன் ஓது மாதவர் பெரு வாழ்வே
    அழகிய பன்னிரு தோள்களை உடைய ஆறுமுக வேளே என்று உன்னை ஞானத்துடன் ஓதுகின்ற மகா தவசிகளுக்கு பெரிய செல்வமாக உள்ளவனே,
  • விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட
    ரிஷப வாகனத்தை உடைய சிவபெருமான் மீது அன்பு மிகவும் உள்ளத்தில் கொண்ட அடியார்களின் தீவினைகள் சிதறுண்டு தூரத்தில் விலகி ஓட,
  • மேல் அணைபவர் மூதூர் விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் ஆதையில்
    தன்னிடத்தே வந்து சேர்ந்து தரிசிப்பதான பழைமை வாய்ந்த இத்தலத்தில், நறு மணம் நிறைந்த மயில் போன்ற மாதர்கள் ஆர்வத்துடன் நடனம் ஆடுகின்ற திருஆமாத்தூர்* என்னும் தலத்தில்,
  • விறல் மயில் மீது மேவிய பெருமாளே.
    வீரம் வாய்ந்த மயிலின் மேல் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com