திருப்புகழ் 682 அணி செவ்வியார் (வடதிருமுல்லைவாயில்)

தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி  யார்திரை  சூழ்புவி 
தனநிவ்வி  யேகரை  யேறிட 
அறிவில்லி  யாமடி  யேனிட  ......  ரதுதீர 
அருள்வல்லை  யோநெடு  நாளின 
மிருளில்லி  லேயிடு  மோவுன 
தருளில்லை  யோஇன  மானவை  ......  யறியேனே 
குணவில்ல  தாமக  மேரினை 
யணிசெல்வி  யாயரு  ணாசல 
குருவல்ல  மாதவ  மேபெறு  ......  குணசாத 
குடிலில்ல  மேதரு  நாளெது 
மொழிநல்ல  யோகவ  ரேபணி 
குணவல்ல  வாசிவ  னேசிவ  ......  குருநாதா 
பணிகொள்ளி  மாகண  பூதமொ 
டமர்கள்ளி  கானக  நாடக 
பரமெல்லி  யார்பர  மேசுரி  ......  தருகோவே 
படரல்லி  மாமலர்  பாணம 
துடைவில்லி  மாமத  னாரனை 
பரிசெல்வி  யார்மரு  காசுர  ......  முருகேசா 
மணமொல்லை  யாகி  நகாகன 
தனவல்லி  மோகன  மோடமர் 
மகிழ்தில்லை  மாநட  மாடின  ......  ரருள்பாலா 
மருமல்லி  மாவன  நீடிய 
பொழில்  மெல்லி  காவன  மாடமை 
வடமுல்லை  வாயிலின்  மேவிய  ......  பெருமாளே. 
  • அணிசெவ்வியார் திரை சூழ்புவி
    அழகு நிறைந்த மாதர் (பெண்), கடல் சூழ்ந்த பூமி (மண்),
  • தன நிவ்வியே கரை யேறிட
    செல்வம் (பொன்) என்ற மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான
  • அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர
    அறிவற்றவனாகிய அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய
  • அருள்வல்லையோ
    திருவருளை வலிய அருள்வாயோ?
  • நெடு நாளினம் இருளில்லிலேயிடுமோ
    அல்லது நீண்ட காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ?
  • உனதருளில்லையோ
    உனது திருவருள் என்மீது சிறிதும் இல்லையோ?
  • இனமானவை யறியேனே
    உன்அடியார் கூட்டத்தை நான் அறியவில்லையே.
  • குணவில்லதா மக மேரினை
    சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய*
  • அணிசெல்வியாய் அருணாசல குரு
    அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே,
  • வல்ல மாதவ மேபெறு குணசாத
    திண்ணிய பெரும் தவநிலையே பெறும்படியான நற்குணத்தோடு கூடிய பிறப்பில் கிடைத்த
  • குடிலில்லமே தரு நாளெது மொழி
    உடலாகிய வீட்டை எனக்கு நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக.
  • நல்ல யோகவ ரேபணி குணவல்லவா
    நல்ல யோகிகளே பணிகின்ற நற்குண சீலனே,
  • சிவனேசிவ குருநாதா
    சிவனே, சிவபிரானுக்கு குரு மூர்த்தியே,
  • பணிகொள்ளி
    பாம்புகளை ஆபரணமாகப் பூண்டவளும்,
  • மாகண பூதமொடமர்கள்ளி
    பெரிய கணங்களாகிய பூதங்களோடு அமர்ந்த திருடியும்,
  • கானக நாடக பரமெல்லியார்
    காட்டில் சிவனுடன் நடனம் ஆடுகின்றவளும், மேலான மென்மையுடையவளுமான
  • பரமேசுரி தருகோவே
    பரமேஸ்வரி பார்வதிதேவி பெற்ற தலைவனே,
  • படரல்லி மாமலர் பாணமதுடைவில்லி
    நீரில் படரும் அல்லி, தாமரை, நீலோற்பலம் முதலிய சிறந்த மலர்ப் பாணங்களை உடைய வில்லியாகிய
  • மாமதனாரனை பரிசெல்வியார் மருகா
    அழகிய மன்மதனின் அன்னையும், பெருமை வாய்ந்த செல்வியுமாகிய லக்ஷ்மிதேவியின் மருமகனே,
  • சுர முருகேசா
    தெய்வ முருகேசனே,
  • மணமொல்லையாகி நகாகனதனவல்லி
    திருமணம் விரைவில் புரிந்தவளும், பெருமை வாய்ந்த மலைக் கொடியும் ஆகிய பார்வதிதேவி
  • மோகனமோடமர் மகிழ்தில்லை
    வசீகரத்துடன் அமர்ந்து மகிழும் சிதம்பரத்தில்
  • மாநட மாடினர் அருள்பாலா
    பெரிய நடனம் ஆடிய சிவபிரான் அருளிய பாலனே,
  • மருமல்லி மாவன நீடிய
    வாசனைமிக்க மல்லிகை பெருங்காடாக வளர்ந்துள்ள
  • பொழில் மெல்லி காவன மாடமை
    சோலையும், மென்மையான பூந்தோட்டங்களும், நீர்நிலைகளும் பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள
  • வடமுல்லைவாயிலின் மேவிய பெருமாளே.
    வடமுல்லைவாயிலில்** மேவும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com