திருப்புகழ் 670 நிகரில் பஞ்ச (விரிஞ்சிபுரம்)

தனன தந்த தானன தனன தந்த தானன
தனன தந்த தானன ...... தனதான
நிகரில்  பஞ்ச  பூதமு  நினையு  நெஞ்சு  மாவியு 
நெகிழ  வந்து  நேர்படு  ......  மவிரோதம் 
நிகழ்த  ரும்ப்ர  பாகர  நிரவ  யம்ப  ராபர 
நிருப  அங்கு  மாரவெ  ......  ளெனவேதம் 
சகர  சங்க  சாகர  மெனமு  ழங்கு  வாதிகள் 
சமய  பஞ்ச  பாதக  ......  ரறியாத 
தனிமை  கண்ட  தானகிண்  கிணிய  தண்டை  சூழ்வன 
சரண  புண்ட  ரீகம  ......  தருள்வாயே 
மகர  விம்ப  சீகர  முகர  வங்க  வாரிதி 
மறுகி  வெந்து  வாய்விட  ......  நெடுவான 
வழிதி  றந்து  சேனையு  மெதிர்ம  லைந்த  சூரனு 
மடிய  இந்தி  ராதியர்  ......  குடியேறச் 
சிகர  துங்க  மால்வரை  தகர  வென்றி  வேல்விடு 
சிறுவ  சந்த்ர  சேகரர்  ......  பெருவாழ்வே 
திசைதொ  றும்ப்ர  பூபதி  திசைமு  கன்ப  ராவிய 
திருவி  ரிஞ்சை  மேவிய  ......  பெருமாளே. 
  • நிகரில் பஞ்ச பூதமு
    ஒப்பில்லாத ஐந்து பூதங்களும்,
  • நினையு நெஞ்சும் ஆவியு
    நினைக்கும் நெஞ்சும், உயிரும்,
  • நெகிழ வந்து நேர்படும் அவிரோதம்
    நெகிழும்படி கூடுகின்ற விரோதமின்மையை
  • நிகழ் தரும் ப்ரபாகர
    ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே,
  • நிரவயம் பராபர
    அழிவில்லாத மேலான பொருளே,
  • நிருப அங்குமாரவெளென வேதம்
    அரசனே, அழகிய குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும்,
  • சகர சங்க சாகரம் என
    சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான சமுத்திரம் போல
  • முழங்கு வாதிகள்
    பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம்
  • சமய பஞ்ச பாதகர் அறியாத
    சமயவாதிகளான பஞ்சமா பாதகர்களால் அறியப்படாததும்,
  • தனிமை கண்டதான
    ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும்,
  • கிண் கிணிய தண்டை சூழ்வன
    கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ளதுமான
  • சரண புண்டரீகம் அது அருள்வாயே
    திருவடித் தாமரையதனைத் தந்தருள்வாயாக.
  • மகர விம்ப சீகர
    மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும்,
  • முகர வங்க வாரிதி
    ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடல்
  • மறுகி வெந்து வாய்விட
    கலக்கமுற்று, சூடாகி, கொந்தளிக்கவும்,
  • நெடுவான வழிதிறந்து சேனையும்
    பெரிய ஆகாய* மார்க்கமாக வந்த சேனைகளும்,
  • எதிர்மலைந்த சூரனு மடிய
    எதிர்த்துப் போர் செய்த சூரனும் மாண்டு போக,
  • இந்தி ராதியர் குடியேற
    இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற,
  • சிகர துங்க மால்வரை தகர
    சிகரங்களை உடைய உயர்ந்த மந்திரஜால கிரெளஞ்சமலை தகர்ந்துபோக
  • வென்றி வேல்விடு சிறுவ
    வெற்றி வேலினை விடுத்த சிறுவனே,
  • சந்த்ர சேகரர் பெருவாழ்வே
    சந்திரனை முடியில் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே,
  • திசைதொறும் ப்ர பூபதி
    திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த அரசர்களும்,
  • திசைமுகன்பராவிய
    நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய
  • திருவிரிஞ்சை மேவிய பெருமாளே.
    திருவிரிஞ்சைத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com