திருப்புகழ் 67 தொடரியமன் (திருச்செந்தூர்)

தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் ...... தனதான
தொடரிய  மன்போற்  றுங்கப் 
படையைவ  ளைந்தோட்  டுந்துட் 
டரையிள  குந்தோட்  கொங்கைக்  ......  கிடுமாயத் 
துகில்விழ  வுஞ்சேர்த்  தங்கத் 
துளைவிர  குஞ்சூழ்த்  தண்டித் 
துயர்விளை  யுஞ்சூட்  டின்பத்  ......  தொடுபாயற் 
கிடைகொடு  சென்றீட்  டும்பொற் 
பணியரை  மென்றேற்  றங்கற் 
றனையென  இன்றோட்  டென்றற்  ......  கிடுமாதர்க் 
கினிமையி  லொன்றாய்ச்  சென்றுட் 
படுமன  முன்றாட்  கன்புற் 
றியலிசை  கொண்டேத்  தென்றுட்  ......  டருவாயே 
நெடிதுத  வங்கூர்க்  குஞ்சற் 
புருடரும்  நைந்தேக்  கம்பெற் 
றயர்வுற  நின்றார்த்  தங்கட்  ......  கணையேவும் 
நிகரில்ம  தன்தேர்க்  குன்றற் 
றெரியில்வி  ழுந்தேர்ப்  பொன்றச் 
சிறிதுநி  னைந்தாட்  டங்கற்  ......  றிடுவார்முன் 
திடமுறு  அன்பாற்  சிந்தைக் 
கறிவிட  முஞ்சேர்த்  தும்பர்க் 
கிடர்களை  யும்போர்ச்  செங்கைத்  ......  திறல்வேலா 
தினவரி  வண்டார்த்  தின்புற் 
றிசைகொடு  வந்தேத்  திஞ்சித் 
திருவளர்  செந்தூர்க்  கந்தப்  ......  பெருமாளே. 
  • தொடர் இயமன் போல் துங்கப் படையை வளைந்து ஓட்டும் துட்டரை
    தோல்வியின்றித் தொடர்ந்து வரும் யமனைப் போல காமனது வெற்றிப் படைகளை வளைத்துச் செலுத்தும் துஷ்டர்களாகிய விலைமாதர்களுக்கு,
  • இளகும் தோள் கொங்கைக்கு இடு(ம்) மாயத்துகில் விழவும் சேர்த்து அங்கத்து உளை விரகும் சூழ்த்து அண்டி
    தழைத்த தோளின் மீதும் மார்பகங்கள் மீதும் அணிந்துள்ள, மயக்கத்தைத் தர வல்ல, ஆடை விழவும், உடலோடு சேர்த்து வருந்தக் கூடிய தந்திர சூழ்ச்சிகளுடன் நெருங்கி,
  • துயர் விளையும் சூட்டு இன்பத்தொடு பாயற்கு இடை கொ(ண்)டு சென்று ஈட்டும் பொன் பணியரை
    துன்பம் விளைவிக்கும் சூடான இன்பத்துடன் படுக்கை இடத்துக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பொன் அணிகளை உடைய விலைமாதர்களுக்கு,
  • மென்று ஏற்றம் கற்றனை என இன்று ஓட்டென்று அற்கிடு(ம்) மாதர்க்கு
    மெதுவாகத் தெளிவு கற்றுக்கொண்டு விட்டாயோ எனக் கூறி, இன்று ஓடிப் போய்விடு என்று விரட்டி அன்பு சுருங்கும் விலைமாதர்களுக்கு,
  • இனிமையில் ஒன்றாய்ச் சென்று உட்படும் மனம் உன் தாட்கு அன்பு உற்று இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே
    இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக.
  • நெடிது தவம் கூர்க்கும் சற்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயர்வு உற நின்று ஆர்த்(து) தங்கள் கணை ஏவும் நிகர் இல் மதன்
    நீண்ட தவத்தை மேற்கொண்ட உத்தமமானவர்களும் நொந்துபோய் ஏக்கம் கொண்டு சோர்வு அடையும்படியாக, நின்று ஆர்ப்பரித்து தமது மலர் அம்புகளைச் செலுத்தும் ஒப்பு இல்லாத மன்மதன்
  • தேர்க் குன்று அற்று எரியில் விழுந்து ஏர்ப் பொன்றச் சிறிது நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன்
    தமது மலை போன்ற தேரை இழந்து, தீயில் விழுந்து, அழகு அழியும் வண்ணம், சற்றே நினைந்து திருவிளையாடலைச் செய்த சிவபெருமான் முன்னிலையில்,
  • திடம் உறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து
    திடம் கொண்ட அன்பினால் அந்தச் சிவனுடைய மனதில் தெளிவு தரும் அறிவுப் பொருளை உபதேசித்து,
  • உம்பர்க்கு இடர் களையும் போர்ச் செம் கைத் திறல் வேலா
    தேவர்களின் துன்பத்தைக் களைய சண்டை செய்து, செவ்விய திருக்கையில் உள்ள திறல் வாய்ந்த வேலாயுதத்தை உடையவனே,
  • தின(ம்) வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொ(ண்)டு வந்து ஏத்தி இஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே.
    நாள்தோறும், ரேகைகளை உடைய வண்டுகள் ஒலித்து இன்புற்று இசையுடன் வந்து ஏத்துகின்ற, மதில் சூழ்ந்த, செல்வம் வளரும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com