திருப்புகழ் 651 தாரணிக் கதி (காசி)

தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன ...... தனதான
தார  ணிக்கதி  பாவி  யாய்வெகு 
சூது  மெத்திய  மூட  னாய்மன 
சாத  னைக்கள  வாணி  யாயுறு  ......  மதிமோக 
தாப  மிக்குள  வீண  னாய்பொரு 
வேல்வி  ழிச்சிய  ராகு  மாதர்கள் 
தாமு  யச்செயு  மேது  தேடிய  ......  நினைவாகிப் 
பூர  ணச்சிவ  ஞான  காவிய 
மோது  தற்புணர்  வான  நேயர்கள் 
பூசு  மெய்த்திரு  நீறி  டாஇரு  ......  வினையேனைப் 
பூசி  மெய்ப்பத  மான  சேவடி 
காண  வைத்தருள்  ஞான  மாகிய 
போத  கத்தினை  யேயு  மாறருள்  ......  புரிவாயே 
வார  ணத்தினை  யேக  ராவுமு 
னேவ  ளைத்திடு  போதுமேவிய 
மாய  வற்கித  மாக  வீறிய  ......  மருகோனே 
வாழு  முப்புர  வீற  தானது 
நீறெ  ழப்புகை  யாக  வேசெய்த 
மாம  திப்பிறை  வேணி  யாரருள்  ......  புதல்வோனே 
கார  ணக்குறி  யான  நீதிய 
ரான  வர்க்குமு  னாக  வேநெறி 
காவி  யச்சிவ  நூலை  யோதிய  ......  கதிர்வேலா 
கான  கக்குற  மாதை  மேவிய 
ஞான  சொற்கும  ராப  ராபர 
காசி  யிற்பிர  தாப  மாயுறை  ......  பெருமாளே. 
  • தார ணிக்கதி பாவியாய்
    இந்த உலகிலேயே அதிக பாவியாய்,
  • வெகு சூது மெத்திய மூட னாய்
    மிக்க சூது நிறைந்த மூடனாய்,
  • மன சாதனைக் களவாணியாய்
    மனத்திலே அழுந்திய திருட்டுப் புத்தியை உடையவனாய்,
  • உறு மதிமோக தாப மிக்குள வீணனாய்
    மிகுந்த காம மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய்,
  • பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
    போருக்கு உற்ற வேல் போன்ற கண்களை உடைய பொது மகளிர்
  • தாமுயச்செயும் ஏது தேடிய நினைவாகி
    தாம் பிழைப்பதற்கு உதவும் செல்வத்தை தேடித் தரும் நினைவையே கொண்டு,
  • பூரணச்சிவ ஞான காவியம்
    பரிபூரணமான சிவஞான நூல்களை
  • ஓதுதற்புணர்வான நேயர்கள்
    ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள்
  • பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனை
    பூசுகின்ற மகிமை வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய (புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை
  • பூசி மெய்ப்பதமான சேவடி
    திருநீற்றைப் பூசவைத்து, உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை
  • காண வைத்தருள் ஞான மாகிய
    தரிசனம் செய்வித்து திருவருள்மயமான ஞானம் என்ற
  • போத கத்தினையேயு மாறருள் புரிவாயே
    தூய அறிவும் எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக.
  • வாரணத்தினையே கராவுமுனே
    கஜேந்திரன் என்ற யானையை முதலை முன்னொருநாள்
  • வளைத்திடு போதுமேவிய
    வளைத்து இழுத்த போது அங்கு வந்து உதவிய
  • மாயவற்கு இதமாக வீறிய மருகோனே
    மாயவன் திருமாலுக்கு மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே,
  • வாழு முப்புர வீற தானது
    பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவெல்லாம்
  • நீறெழப்புகையாக வேசெய்த
    சாம்பலாகப் போகுமாறு புகை எழச் செய்த
  • மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே
    சிறந்த திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே,
  • காரணக்குறி யான நீதியர்
    யாவற்றிற்கும் மூல காரணனாகவும், இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான்
  • ஆனவர்க்கு முனாகவே
    சிவபிரானது சந்நிதிகளில்
  • நெறிகாவியச்சிவ நூலை யோதிய கதிர்வேலா
    அறநெறியை ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளி வேலனே,
  • கானகக்குற மாதை மேவிய
    காட்டில் குறப்பெண் வள்ளியை விரும்பி அடைந்த
  • ஞான சொற்குமரா பராபர
    ஞான மொழி பேசும் குமரனே, யாவர்க்கும் மேலானவனே,
  • காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே.
    காசித்தலத்தில்* பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com