திருப்புகழ் · 65துன்பங்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்)

தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான

Thiruppugazh Anbargal

துன்பங்கொண் டங்கமெ லிந்தற
நொந்தன்பும் பண்பும றந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி ...... லணுகாதே
இன்பந்தந் தும்பர்தொ ழும்பத
கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி
யென்றென்றுந் தொண்டுசெ யும்படி ...... யருள்வாயே
நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு ...... மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்குவ லம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.

பத உரை

  • துன்பங்கொண்டு அங்கம் மெலிந்து
    துன்பப்பட்டு, தேகம் மெலிந்து,
  • அற நொந்து
    மிகவும் நொந்துபோய்,
  • அன்பும் பண்பும் மறந்து
    அன்பையும் நல்ல குணங்களையும் மறந்து,
  • ஒளி துஞ்சும்
    தேக காந்தி மங்கும்படி செய்யும்
  • பெண் சஞ்சல மென்பதில்
    பெண் மயக்கம் என்னும் துக்கத்தில்
  • அணுகாதே
    நான் அணுகி சிக்கிக்கொள்ளாமல்
  • இன்பந்தந்து
    இன்பத்தைக் கொடுத்து
  • உம்பர் தொழும்பத கஞ்சம்
    தேவர்கள் தொழும் உன் பாதத் தாமரையே
  • தம் தஞ்ச மெனும்படி
    நமது தஞ்சம் என்று கொண்டு
  • என்றென்றுந் தொண்டு செயும்படி
    எப்போதும் உனக்குத் தொண்டு செய்யும்படி
  • அருள்வாயே
    நீ அருளவேண்டும்.
  • நின்பங்கு ஒன்றும்
    உன் பக்கத்திலேயே இணைந்து நிற்கும்
  • குற மின்சரணங்கண்டு
    குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களைக் கண்டு
  • உன் தஞ்ச மெனும்படி நின்று
    இதுவே எனக்குப் புகலிடம் என்று நின்று
  • அன்பின் தன்படி
    அன்பின் முறைப்படி
  • கும்பிடு மிளையோனே
    அவள் பாதத்தில் கும்பிட்ட இளையோனே,
  • பைம்பொன் சிந்தின்
    பசுமைப் பொலிவு பெற்ற கடலின்
  • துறை தங்கிய
    கரையில் விளங்கும்
  • குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்பும்
    குன்றெல்லாம் சங்கும் வலம்புரியும் நிரம்பிய
  • தென் செந்திலில் வந்தருள் பெருமாளே.
    அழகிய திருச்செந்தூரில் வந்தருள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout