திருப்புகழ் 623 அழகு எறிந்த (குன்றக்குடி)

தனன தந்த தந்த தனன தந்த தந்த
தனன தந்த தந்த ...... தனதான
அழகெ  றிந்த  சந்த்ர  முகவ  டங்க  லந்த 
அமுத  புஞ்ச  இன்சொல்  ......  மொழியாலே 
அடிது  வண்ட  தண்டை  கலிலெ  னுஞ்சி  லம்பொ 
டணிச  தங்கை  கொஞ்சு  ......  நடையாலே 
சுழியெ  றிந்து  நெஞ்சு  சுழல  நஞ்ச  ணைந்து 
தொடுமி  ரண்டு  கண்க  ......  ளதனாலே 
துணைநெ  ருங்கு  கொங்கை  மருவு  கின்ற  பெண்கள் 
துயரை  யென்றொ  ழிந்து  ......  விடுவேனோ 
எழுது  கும்ப  கன்பி  னிளைய  தம்பி  நம்பி 
யெதிர  டைந்தி  றைஞ்சல்  ......  புரிபோதே 
இதம  கிழ்ந்தி  லங்கை  யசுர  ரந்த  ரங்க 
மொழிய  வென்ற  கொண்டல்  ......  மருகோனே 
மழுவு  கந்த  செங்கை  அரனு  கந்தி  றைஞ்ச 
மநுவி  யம்பி  நின்ற  ......  குருநாதா 
வளமி  குந்த  குன்ற  நகர்பு  ரந்து  துங்க 
மலைவி  ளங்க  வந்த  ......  பெருமாளே. 
  • அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன்சொல் மொழியாலே
    அழகு வீசும் நிலாப் போன்ற முக வட்டத்தினின்றும் வருகின்ற அமுதம் போன்ற திரண்ட இனிய உரைப் பேச்சினாலும்,
  • அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே
    பாதத்தில் நெளிந்து கிடக்கும் தண்டையும், கலில் என்று சப்தம் செய்யும் சிலம்பும், அழகிய சதங்கையும் கொஞ்சி ஒலிக்கின்ற நடையாலும்,
  • சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே
    மனம் நீர்ச்சுழி போல் சுழற்சி உறும்படிச் செய்யும் விஷம் கலந்து செலுத்தும் கண்களினாலும்,
  • துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ
    ஒன்றோடொன்று இணைந்து நெருங்கும் மார்பகங்கள் பொருந்தி உள்ள விலைமாதர்களின் காமத் துயரை என்றைக்கு ஒழித்து விடுவோனோ?
  • எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல் புரி போதே
    (அடைக்கலம் புக) எழுந்து வந்து கும்பகர்ணனின் இளைய தம்பியாகிய விபீடணன் ராமனது எதிரில் வந்து வணங்கிய அந்தச் சமயத்திலேயே,
  • இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே
    மனம் மகிழ்ந்து இலங்கை அசுரர்களின் (ராணுவ) ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற மேக நிறத்தினனாகிய ராமனின் மருகனே,
  • மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா
    மழு ஆயுதத்தை விரும்பி ஏந்தும் சிவபிரான் ஆர்வத்துடன் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,
  • வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே.
    வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து, பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com