திருப்புகழ் · 621அனங்கன் அம்பு (கொடுங்குன்றம்)

தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான

Balasundharam Subramaniam

அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே
அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.

பத உரை

  • அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே
    மன்மதனுடைய பொருந்திய மலர்ப் பாணங்கள் ஐந்தும் தங்குகின்ற கண்களாலே,
  • அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே
    நெருங்கி எழுந்துள்ள பொன் மலை, குடம் போன்ற மார்பகங்களாலே,
  • முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே
    கோபித்தும், பொதுச்சபை ஏறியும் தமக்கு உரிய பொருளைக் கண்டிப்புடன் வசூலிக்கும் விலைமாதர்களால்,
  • முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ
    (உனக்கு நான் செய்யும்) தொண்டு தடைபடுவதை இரக்கத்துடன் பார்த்து, இன்று (உனது) திருவுள்ளம் இன்பம் அடையாதோ?
  • தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா
    தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தென் என்ற ஒலிகளைச் செய்து,
  • செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட
    கூடி நெருங்கிச் சென்று, நல்ல முறையில் வண்டுகள் இசைக்க,
  • குனிந்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை
    வளைந்து விளங்கும் கிளைகளும், பூங்கொத்துகளும் நெருங்கிய சோலைகள் (சூழ்ந்துள்ள)
  • கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே.
    செழுமையான திண்ணிய கொடுங்குன்றம் என்னும் பிரான் மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே.

குறிப்புகள் · notes

  • * கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.
  • * KodungkundRam (PirAn malai) is in RAmanAthapuram District. It is 15 miles northwest of Thiruppattur, which is 22 miles north of Sivaganga.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout