திருப்புகழ் · 62தண்டை அணி (திருச்செந்தூர்)thaNdaiaNi
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ...... தந்ததானா
Yaazh Music
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
பத உரைword meanings
- தண்டை அணி
தண்டை என்கின்ற காலணி, - வெண்டையங் கிண் கிணி
வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, - சதங்கையுந்
(சலங்கை என்னும்) சதங்கையும், - தண்கழல் சிலம்புடன்
அருள் கழல்களும், சிலம்புடன் - கொஞ்சவே
(எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க - நின் தந்தையினை முன்பரிந்து
உன் தந்தை சிவனை அன்புடன் - இன்பவுரி கொண்டு
வலம்வந்து - நன் சந்தொடம் அணைந்து
நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து - நின்று அன்பு போல
நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, - கண்டுற
(இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, - கடம்புடன் சந்த மகுடங்களும்
கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், - கஞ்ச மலர் செங்கையும்
தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், - சிந்துவேலும்
சூரனை அழித்த வேலும், - கண்களு முகங்களும்
பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், - சந்திர நிறங்களும்
(அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், - கண் குளிர
என் கண்கள் குளிரும்படியாக - என்றன்முன் சந்தியாவோ?
என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? - புண்டரிகர் அண்டமும்
தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், - கொண்ட பகிரண்டமும்
அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், - பொங்கி எழ
மகிழ்ச்சி பொங்கி எழ, - வெங்களங் கொண்ட போது
நீ போர்க்களம் புகுந்த போது, - பொன்கிரி யெனஞ் சிறந்து
பொன்மலை என்னும்படி அழகு சிறந்து - எங்கினும் வளர்ந்து
எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று - புண்டரிகர் தந்தையும்
தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் - சிந்தைகூர
மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக - கொண்ட நடனம் பதம்
நீ கொண்ட நடனப் பாதங்கள் - செந்திலிலும்
திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், - என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும்
என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் - கந்தவேளே
கந்தனாகிய மன்மத சொரூபனே - கொங்கை குறமங்கையின் சந்த மணம்
குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் - உண்டிடும் (தம்பிரானே)
மார்பை நுகர்கின்ற தம்பிரானே - கும்பமுனி கும்பிடும் தம்பிரானே.
அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே.
குறிப்புகள் · notes
- * முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.
- * When Murugan took the ViswarUpa - Hypercosmic form, in the battlefield after destroying the demon, SUran, the Universe rejoiced and Vishnu and SivA were elated.
