திருப்புகழ் · 581மாலாசை கோபம் (விராலிமலை)

mAlAsaikObam

தானான தான தானான தான
தானான தான ...... தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார ...... வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு ...... மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு ...... மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேச ...... மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக ...... அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை ...... வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத ...... பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • மாலாசை கோபம்
    மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம்
  • ஓயாதெ நாளும்
    ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும்
  • மாயா விகார வழியேசெல்
    பிரபஞ்ச மாயாவிகார வழியிலே போகின்ற
  • மாபாவி காளி தானேனு
    மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான் நானெனிலும்,
  • நாத மாதா பிதாவு மினிநீயே
    நாதனே, தாயும், தந்தையும் இனி நீதான் எனக்கு
  • நாலான வேத நூல்
    நான்கு வேத நூல்களையும்,
  • ஆக மாதி
    ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும்,
  • நானோதி னேனு மிலை
    நான் படித்ததும் இல்லை.
  • வீணே நாள்போய் விடாமல்
    வீணாக வாழ்நாள் போய் விடாமல்
  • ஆறாறு மீதில்
    முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட
  • ஞானோபதேசம் அருள்வாயே
    நிலைத்த ஞானோபதேசத்தை அருள்வாயே,
  • பாலா கலார ஆமோத
    பாலனே, செங்குவளை மலர்ப் பிரியனே,
  • அணிமீதே லேப பாடீர வாக
    ஆபரணங்களின் மேல் சந்தனம் பூசிய அழகனே,
  • பாதாள பூமி யாதார
    பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே,
  • மீன பானீய
    மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த
  • மேலை வயலூரா
    மேற்கு வயலூரில் குடிகொண்டவனே,
  • வேலா விராலி வாழ்வே
    வேலனே, விராலிமலைச்** செல்வனே,
  • சமூக வேதாள பூத பதி
    திரளான பேய்கள், பூதகணங்கள் வணங்கும் தலைவன் (சிவன்)
  • சேயே
    குமாரனே,
  • வீரா கடோர சூராரியே
    வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே,
  • செவேளே சுரேசர் பெருமாளே.
    செவ்வேளே, தேவர்களுக்கு ஈசனே, பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits