திருப்புகழ் 577 கரிபுராரி காமாரி (விராலிமலை)

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கரிபு  ராரி  காமாரி  திரிபு  ராரி  தீயாடி 
கயிலை  யாளி  காபாலி  ......  கழையோனி 
கரவு  தாச  னாசாரி  பரசு  பாணி  பானாளி 
கணமொ  டாடி  காயோகி  ......  சிவயோகி 
பரம  யோகி  மாயோகி  பரிய  ராஜ  டாசூடி 
பகரொ  ணாத  மாஞானி  ......  பசுவேறி 
பரத  மாடி  கானாடி  பரவ  யோதி  காதீத 
பரம  ஞான  வூர்பூத  ......  அருளாயோ 
சுருதி  யாடி  தாதாவி  வெருவி  யோட  மூதேவி 
துரக  கோப  மீதோடி  ......  வடமேரு 
சுழல  வேலை  தீமூள  அழுத  ளாவி  வாய்பாறி 
சுரதி  னோடு  சூர்மாள  ......  வுலகேழும் 
திகிரி  மாதி  ராவார  திகிரி  சாய  வேதாள 
திரளி  னோடு  பாறோடு  ......  கழுகாடச் 
செருவி  னாடு  வானீப  கருணை  மேரு  வேபார 
திருவி  ராலி  யூர்மேவு  ......  பெருமாளே. 
  • கரிபுராரி
    யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும்,
  • காமாரி
    மன்மதனை எரித்தவரும்,
  • திரிபு ராரி
    திரிபுரத்தை அழித்தவரும்,
  • தீயாடி
    சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும்,
  • கயிலை யாளி
    கயிலைமலைக்கு இறைவரும்,
  • காபாலி
    மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும்,
  • கழையோனி
    மூங்கிலின் கீழே தோன்றியவரும்*,
  • கர உதாசன ஆசாரி
    கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய குருநாதரும்,
  • பரசு பாணி
    மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும்,
  • பானாளி
    நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும்,
  • கணமொ டாடி
    பூத கணங்களுடன் ஆடுபவரும்,
  • காயோகி சிவயோகி
    உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ யோகியும்,
  • பரம யோகி மாயோகி
    பரம யோகியும், மகா கனம் பொருந்திய யோகியும்,
  • பரி அரா ஜடாசூடி
    பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும்,
  • பகரொணாத மாஞானி
    சொல்லுதற்கு அரிய மகா ஞானியும்,
  • பசுவேறி
    பசுவை வாகனமாகக் கொண்டவரும்,
  • பரதம் ஆடி கானாடி
    பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும்,
  • பர வயோதிக அதீத
    மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய
  • பரம ஞான வூர்
    பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள் (சிவஞானபீடத்தில்)
  • பூத அருளாயோ
    யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ?
  • சுருதி யாடி தாதா
    வேதங்களை அத்யயனம் செய்த பிரமன்
  • வி வெருவி யோட
    மிகவும் அஞ்சி ஓடவும்,
  • மூதேவி துரக
    மூதேவி அகன்று ஓடவும்,
  • கோப மீதோடி வடமேரு சுழல
    மிக்க கோபம் கொண்டு, வடக்கே உள்ள மேருமலை சுழலவும்,
  • வேலை தீமூள
    கடலிலே நெருப்பு பிடித்துக்கொள்ளவும்,
  • அழுது அளாவி வாய்பாறி சுரதினோடு சூர் மாள
    வாய் கிழிய அழுகை கலந்த ஓசையுடன் சூரன் மாயவும்,
  • உலகேழும்
    ஏழு உலகங்களுடன்
  • திகிரி மாதிர ஆவார திகிரி சாய
    வட்டமான, திசைகளை மறைக்கும், சக்ரவாளகிரியும் சாயவும்,
  • வேதாள திரளினோடு பாறோடு கழுகாட
    பேய்க் கூட்டங்களுடன் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும்,
  • செருவில் நாடு
    போர்க்களத்தை விரும்பிச் சென்றவனே,
  • வான் நீப
    பரிசுத்தமான கடம்பமாலையை அணிந்தவனே,
  • கருணை மேருவே
    கருணையின் மேருமலையே,
  • பார திருவி ராலியூர்மேவு பெருமாளே.
    பெருமை மிக்க அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com