தனதான தான தத்த தனதான தான தத்த
தனதான தான தத்த ...... தந்ததான
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.
- உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக
உருப்போடுகின்ற எண்ணிக்கை நிரம்ப ஆகி மனத்தில் பதியும்படி ஜெபம் செய்து, கோடிக் கணக்கான வேள்வியால் வரும் பேறுகள் கூடிவர, - ஆகமத்து உகந்து பேணி உணர்வு ஆசை யாரிடத்தும்
மருவாது
சிவாகமத்து விதிகளை (சிவபூஜை செய்யும் முறைகளை) மகிழ்ச்சியுடன் அனுசரித்து விரும்பி, அறிதலும் ஆசையையும் யாரிடத்திலும் பொருந்த வைக்காமல், - ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும்
ஓரெழுத்தாகிய பிரணவத்தை எப்போதும் ஓதி, நாள் தோறும் (பிராணாயாம முறைப்படி) சுவாசத்தை விடுத்திருந்து, - தரியாத போதகத்தர் குருவாவர்
நிலைத்த ஞானம் இல்லாத அறிவினர் குரு என்னும் பதவியை வகிப்பார்கள். - ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ
ஒரு சிலர் ஞானோபதேசத்தையும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஞான உபதேசம் பற்றுக் கோடு ஆகுமோ? - தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில்
ஆகும் அத்தை கண்டு இலேனே
நெற்றியில் புருவ மத்திய ஸ்தானத்தில் தியானித்தால், பெரு ஞான சித்தியைக் கொடுக்கும் என்றால், அவ்வாறு கொடுக்கின்ற அதை நான் கண்டேன் இல்லை. - குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடிமாள மாய
விட்டு
குருநாட்டை அரசாட்சி செய்த துரியோதனன் முதலியவர்களின் கூட்டம் முற்றும் அழியும்படி மாய வித்தைகளைச் செய்தவனும், - குந்தி பாலர் குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட
குந்தி தேவியின் மைந்தர்களான பாண்டவர்களை அழிந்து போகாமல் நீதி முறையை நிலைப்படுத்தி, ஏழுலகங்களை ஆளும்படி வைத்தவனும், - குறளாக(ன்) ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி மருகா
குட்டை வடிவினனான வாமனனாகி வந்து, கெடுதல் இல்லாத நீண்ட திரிவிக்ரம நருவத்தைக் கொண்ட ஆதி மூர்த்தியாகியும் ஆகிய திருமாலின் மருகனே, - புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த
அம் கை வேலா
திரி புரத்தை எரித்தவனும், திருவிளையாடல்களைப் புரிந்தவனும் ஆன சிவபெருமானின் மகனே, அழகிய விராலி மலை* மேல் உலவுகின்ற சித்தனே, அழகிய கையில் வேல் ஏந்தியவனே, - மதுராபுரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு
மதுராபுரியில் வீற்றிருக்கும் சொக்க நாதரின் உண்மையை விளக்கி**, பாண்டிய மன்னனின் சுரத்தைப் போக்கி, - வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே.
வளைவுபட்டிருந்த அவனது கூனை நிமிர்த்திய தம்பிரானே.



