திருப்புகழ் 532 கை ஒத்து வாழும் (வள்ளிமலை)

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
தய்யத்த தான தந்த ...... தனதான
கையொத்து  வாழு  மிந்த  மெய்யொத்த  வாழ்வி  கந்து 
பொய்யொத்த  வாழ்வு  கண்டு  ......  மயலாகிக் 
கல்லுக்கு  நேரும்  வஞ்ச  வுள்ளத்தர்  மேல்வி  ழுந்து 
கள்ளப்ப  யோத  ரங்க  ......  ளுடன்மேவி 
உய்யப்ப  டாமல்  நின்று  கையர்க்கு  பாய  மொன்று 
பொய்யர்க்கு  மேய  யர்ந்து  ......  ளுடைநாயேன் 
உள்ளப்பெ  றாக  நின்று  தொய்யப்ப  டாம  லென்று 
முள்ளத்தின்  மாய்வ  தொன்றை  ......  மொழியாயோ 
ஐயப்ப  டாத  ஐந்து  பொய்யற்ற  சோலை  தங்கு 
தெய்வத்தெய்  வானை  கொங்கை  ......  புணர்வோனே 
அல்லைப்பொ  றாமு  ழங்கு  சொல்லுக்ர  சேவ  லொன்று 
வெல்லப்ப  தாகை  கொண்ட  ......  திறல்வேலா 
வையத்தை  யோடி  யைந்து  கையற்கு  வீசு  தந்தை 
மெய்யொத்த  நீதி  கண்ட  ......  பெரியோனே 
வள்ளிக்கு  ழாம  டர்ந்த  வள்ளிக்கல்  மீது  சென்று 
வள்ளிக்கு  வேடை  கொண்ட  ......  பெருமாளே. 
  • கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து
    செய்யத் தக்கதை அறிந்து அதன்படி வாழும் இந்த மெய்யான வாழ்க்கையை விட்டுவிட்டு,
  • பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி
    பொய்யான வாழ்க்கையைப் பார்த்து அதில் மோகம் கொண்டு,
  • கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து
    கல்லைப் போன்ற கடினமான வஞ்சக உள்ளத்தை உடைய பொது மகளிர்மேல் விழுந்து,
  • கள்ளப் பயோதரங்கள் உடன் மேவி
    (அவர்களுடைய) கள்ளத்தனம் பொருந்திய மார்பகங்களின் மேல் பொருந்தி,
  • உய்யப் படாமல் நின்று
    உய்யும் வழியில் சேராது நின்று,
  • கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்குமே அயர்ந்து
    வஞ்சகருடனும், தந்திரம் நிறைந்த பொய்யர் கூட்டத்துடனுமே கலந்து சோர்வடைந்து,
  • உள் உடை நாயேன்
    உள்ளம் குலைகின்ற நாயைப்போன்ற எனக்கு
  • உள்ளப் பெறாக நின்று தொய்யப்படாமல் என்றும்
    மனதில் பெறுதற்கு அரிய செல்வமாக நினைத்து, சோர்வு அடையாமல் எப்போதும்
  • உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ
    நிலைத்துள்ள மனப் பக்குவத்தை (அடைய) ஓர் உபதேச மொழியைச் சொல்ல மாட்டாயோ?
  • ஐயப் படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு
    சந்தேகம் இல்லாத, ஐந்து எனப்படும் பொய்யாத வகையில்* (கேட்டதைத் தரும்) கற்பக மரச் சோலையில் தங்கி வளர்ந்த
  • தெய்வத் தெய்வானை கொங்கை புணர்வோனே
    தெய்வ மகள் தேவயானையின் மார்பகங்களை அணைவோனே,
  • அல்லைப் பொறா முழங்கு சொல் உக்ர சேவல் ஒன்று
    இரவைப் பொறுக்காமல் கூவி ஒலிக்கும் சொல்லை உடைய வலிமையான சேவல் ஒன்றை வைத்துள்ள
  • வெல்லப் பதாகை கொண்ட திறல் வேலா
    வெற்றிக் கொடியைக்கொண்ட வல்லமை படைத்த வேலனே,
  • வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை
    உலகம் முழுமையும் ஓடி வலம் வந்தும், ஐந்து திருக் கரங்களைக்கொண்ட கணபதிக்கு (கனியைக்) கொடுத்த தந்தையாகிய சிவபெருமானுக்கு
  • மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே
    (அவர் நீதி தவறியபோதிலும்) உண்மைக்குப் பொருந்திய பிரணவ மந்திரத்தை நீதி முறையில் தெரிவித்த பெரியோனே,
  • வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
    வள்ளிக் கொடிகள் நிறைந்துள்ள வள்ளி மலை** மேல் ஏறிச் சென்று,
  • வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே.
    வள்ளி நாயகியைத் தேடி அவள்மீது மோகம்கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com