தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
ஒருபது மிருபது மறுபது முடனறு
முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
பிணையமர் திருமலை ...... பெருமாளே.
- ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும்
ஒரு பத்து, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு தத்துவங்களின்* - உணர்வுற
உண்மையை உணர்ந்து, - இருபதம் உளநாடி
உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் தியானித்து - உருகிட
அதனால் உள்ளம் உருகிட, - முழுமதி தழலென ஒளிதிகழ்
பூரண சந்திரனது தீப்போன்று ஒளி வீசும் - வெளியொடு ஒளிபெற விரவாதே
பரவெளியின் ஒளியை யான் பெற்று அதோடு கலவாமல், - தெருவினில் மரமென
வீதியிலே மரம் போல நின்று - எவரொடும் உரைசெய்து திரிதொழில்
யாரோடும் பேசித் திரியும் தொழிலை - அவமது புரியாதே
யான் மேற்கொண்டு வீணாக அலையாது இருப்பதற்காக, - திருமகள் மருவிய
லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய - திரள்புய அறுமுக
திரண்ட தோள்களை உடையவனே, ஆறுமுகனே, - தெரிசனை பெறஅருள் புரிவாயே
உன் அருட்காட்சி பெற எனக்கு அருள் புரிவாயாக. - பரிவுட னழகிய பழமொடு
அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன், - கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம்
கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை - பருகிடு பெருவயி றுடையவர்
உண்ணும் பெரு வயிற்றை உடையவரும், - பழமொழி எழுதிய
பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான - கணபதி யிளையோனே
கணபதிக்குத் தம்பியே, - பெருமலை யுருவிட
பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும், - அடியவர் உருகிட
உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும், - பிணிகெட
அடியார்களின் பிறவிநோய் தொலையவும் - அருள்தரு குமரேசா
திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே, - பிடியொடு களிறுகள் நடையிட
பெண்யானைகளோடு ஆண்யானைகள் உலாவும், - கலைதிரள் பிணையமர்
கலைமான்களின் கூட்டம் பெண்மான்களோடு விரும்பி அமரும் - திருமலை பெருமாளே.
திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள பெருமாளே.



