திருப்புகழ் · 506நாலு சதுரத்த பஞ்ச (சிதம்பரம்)

nAlusadhuraththapancha

தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
தானதன தத்த தந்தன ...... தந்ததான
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற்
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங்
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா
வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே.

பத உரை · word meanings

  • நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை
    நாலு சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்* செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை
  • நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே
    பிராணாயாம மந்திர ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி,
  • நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற
    விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக,
  • இசை நடத்தி மண்டல சந்தி ஆறில்
    (அனாகதம் முதலிய மற்ற நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய
  • கோலமும் உதிப்ப கண்டு
    பல திருக் கோலங்களையும் பார்த்து,
  • உள நாலினை மறித்து
    சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து,
  • இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி
    இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு,
  • விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு
    விந்து சம்பந்த (சிவ - சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி,
  • ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன்
    கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்?
  • ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி
    நீரில் உண்டாகும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பார்வதி, ஆதியும் குலமும் அந்தமும் இல்லாதவள்,
  • ஆரணர் தலைக் கலம் கொளி செம் பொன் வாசி
    வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை (பாத்திரமாகக்) கொண்டவள், செம்பொன்போன்ற உயர் குணம் உடையவள்,
  • ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்றனை ஆள் உமை
    எனது ஆணவத்தையும், மயக்கத்தையும் தோண்டி வேரறுத்து, ஆசைகளை ஒழித்து, என்னை ஆண்டருளிய உமை,
  • பரத்தி சுந்தரி தந்த சேயே
    பராசக்தி, அழகி ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே,
  • வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க
    வேல் ஏந்தி இந்திரர்களும், திருமாலும், பிரமனும் பிழைக்கும் வண்ணம்
  • வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா
    வஞ்சகராகிய அசுரர்களின் வீடுகளை எரி மூட்டி, மதிக்கத் தக்க கடல்களையும் வற்றச் செய்த வேலனே,
  • வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு
    நான்கு வேதங்களையும் உடைய பிரமனுக்கும், சிதம்பரத்தில் வாழ்கின்ற ஒப்பற்ற பார்வதி தேவியைப் பாங்கிலே வைத்து மேம்பட்டு விளங்கும் நடன மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கும்
  • இசைந்து அருள் தம்பிரானே.
    மனம் இசைந்து உபதேசம் செய்தருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits