தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன
தத்த தத்தன தான தானன ...... தனதான
துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே
சுக்கை மைக்குழ லாட நூலிடை
பட்டு விட்டவிர் காம னாரல்குல்
சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர்
தத்தை பட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை
சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச்
சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு விட்டிடு சேசெ சேயென
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட
சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.
- துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இபத் திரள்
வாகுவாய் அவிர் துப்பு முத்தோடு மார்பின் ஆடிட
தேமல் படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி, யானைக் கூட்டங்களின் வெற்றி கொண்டதாகி விளங்கும் பவள (மாலை) முத்து (மாலை) இவைகளோடு மார்பிலே ஆட, - மயில் போலே சுக்கை மைக் குழல் ஆட நூல் இடை
பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் சுற்றுவித்து உறு வாழை
சேர் தொடை விலை மாதர்
மயிலைப் போல் விளங்கி, பூ மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய, நூலைப் போன்ற நுண்ணிய இடையில் பட்டாடை அணிந்து ஒளி விட, காமனுக்கு இடமாகிய பெண்குறியைச் சுற்றி அமைய உடுத்து, விளங்கும் வாழை போன்ற தொடைகளை உடைய பொது மகளிர், - தத்தை புட் குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார்
முலை சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே
கிளியாகிய பறவையின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து ஒலிக்க நடனம் ஆடி, மார்பகங்களை கொஞ்சம் அசைத்து குலவிப் பேசும் பொது மகளிருடன், - தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள்
ஊளை நாய் என சிச்சி சிச்சி என நால்வர் கூறிட
உழல்வேனோ
தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? - தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி திக்கு
முக்கிட மூரி பேரிகை தவில் போட
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும் முக்கித் திணற, வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப, - சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பூ இட்டு இ(ட்)டு சே
செ சே என செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும்
வேலா
அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட, தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய என்று கோஷமிட, செக்கில் போட்டு அசுரர்கள் பொடியாகும்படி செலுத்திய வேலாயுதனே, - அச்சமனார் செத்திட கடா பட அற்று உதைத்த சுவாமியார்
இட சித்திரச் சிவகாமியார் அருள் முருகோனே
அந்த யமன் இறக்கவும், (அவனுடைய) எருமைக் கடா வீழ்ந்து அழியவும், அன்று காலால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்ற குழந்தையே, - தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன
மானோடு சித்திரப் புலியூரில் மேவிய பெருமாளே.
தெற்கே உள்ள ராவணன் முதலிய அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு பொடியாகிப் பாழ்படச் செய்த திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற வள்ளியோடு அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.



