திருப்புகழ் · 488சுரும்பு உற்ற (சிதம்பரம்)

surumbuutRa

தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
தனந்தத்த தனதான ...... தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துள்ள மடமானி ...... னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி ...... வருகோவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ
    வண்டுகள் உள்ள சோலைகள் யாவிலும் விரும்பி அங்கே அடைந்துள்ள குயில்கள் கூவுதலாலும்,
  • துரந்து உற்ற குளிர் வாடை அதனாலும்
    வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும்,
  • துலங்கு உற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல
    (மன்மதனுடைய) வாசனை பொருந்திய பாணங்களாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும்,
  • தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும்
    (இவளைப்) பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சுக்களாலும்,
  • அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும்
    மலர்ந்தும் மலராத அரும்பு நிலையில் உள்ள மலர்கள் தூவப்பட்டதும், வலிமை வாய்ந்த (காமன் தன்) வீரத்தைக் காட்டும் இடமுமான படுக்கையாலும்,
  • அடைந்திட்ட விடை மேவு மணியாலும்
    (மேய்ந்த பின்பு) தத்தம் வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணியின் ஓசையாலும்,
  • அழிந்து உற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி
    (மனம்) அழிந்துள்ள இள மானாகிய இப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து, சமயம் பார்த்து விரும்பி,
  • அசைந்து உற்ற மது மாலை தர வேணும்
    உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.
  • கரும் கொற்ற மத வேழம் முனிந்து உற்ற க(கா)லை
    கரிய, வீரம் வாய்ந்த (கணபதியாகிய) மத யானை கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில்,
  • மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார்
    தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இள மானாகிய வள்ளியுடன் சார்ந்தவனே,
  • கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே
    கரும்புகள் வளர்ந்த வயல்கள் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் மேடையாக பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்து நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே.
  • இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர
    இருந்து பொருந்தி மலர்களை விரும்பி இட்டுப் பூஜிக்கும் அடியார்களின் துயரம் தீர,
  • இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே
    இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசனே,
  • இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொ(ண்)டு எறிந்திட்டு விளையாடு(ம்) பெருமாளே.
    சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரன் தரையில் உருண்டு புரண்டு விழ, வேல் கொண்டு வீசி எறிந்து விளையாடும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits