திருப்புகழ் · 435புலையனான (திருவருணை)

pulaiyanAna

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி ...... குலபாதன்
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி ...... யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் ...... மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை ...... மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • புலையனான மாவீனன்
    கீழ்மகனாக மிகவும் இழிந்தவன்,
  • வினையிலேகு மாபாதன்
    தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன்,
  • பொறையிலாத கோபீகன்
    பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன்
  • முழுமூடன் புகழி லாத தாமீகன்
    முழு முட்டாள், புகழில்லாத வெறும் டாம்பீகன்,
  • அறிவிலாத காபோதி
    அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக் கபோதி,
  • பொறிகளோடி போய்வீழும் அதிசூதன்
    ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன்,
  • நிலையிலாத கோமாளி
    ஒரு நிலையில் நிற்காத கோணங்கி,
  • கொடையி லாத ஊதாரி
    ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன்,
  • நெறியிலாத ஏமாளி
    நல்லொழுக்கம் இல்லாத பேதை,
  • குலபாதன்
    நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான்
  • நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
    உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல்
  • நினையுமாறு நீமேவி யருள்வாயே
    நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக.
  • சிலையில் வாளி தானேவி
    வில்லினின்றும் அம்பைச் செலுத்தி
  • எதிரி ராவணார்தோள்கள் சிதையு மாறு போராடி
    பகைவன் ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு,
  • ஒருசீதை சிறையிலாமலேகூடி
    ஒப்பற்ற சீதையைச் சிறையிலிருந்து விடுவித்து
  • புவனி மீதிலேவீறு திறமியான
    இவ்வுலகிலேயே மிக்க சாமர்த்தியசாலியாக விளங்கிய
  • மாமாயன் மருகோனே
    ராமனாக வந்த மகா மாயன் திருமாலின் மருமகனே,
  • அலைய மேரு மாசூரர் பொடிய தாக
    மேரு மலை அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும்
  • வேலேவி அமரது ஆடியே தோகைமயிலேறி
    வேலினைச் செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில்
  • அதிக தேவரேசூழ உலக மீதிலேகூறும்
    நிரம்ப தேவர்கள் புடை சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும்
  • அருணை மீதிலேமேவு பெருமாளே.
    திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits