திருப்புகழ் 421 சிவமாதுடனே (திருவருணை)

தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ...... தனதான
சிவமா  துடனே  அநுபோ  கமதாய் 
சிவஞா  னமுதே  ......  பசியாறித் 
திகழ்வோ  டிருவோ  ரொருரூ  பமதாய் 
திசைலோ  கமெலா  ......  மநுபோகி 
இவனே  யெனமா  லயனோ  டமரோ 
ரிளையோ  னெனவே  ......  மறையோத 
இறையோ  னிடமாய்  விளையா  டுகவே 
யியல்வே  லுடன்மா  ......  அருள்வாயே 
தவலோ  கமெலா  முறையோ  வெனவே 
தழல்வேல்  கொடுபோ  ......  யசுராரைத் 
தலைதூள்  படஏழ்  கடல்தூள்  படமா 
தவம்வாழ்  வுறவே  ......  விடுவோனே 
கவர்பூ  வடிவாள்  குறமா  துடன்மால் 
கடனா  மெனவே  ......  அணைமார்பா 
கடையேன்  மிடிதூள்  படநோய்  விடவே 
கனல்மால்  வரைசேர்  ......  பெருமாளே. 
  • சிவமா துடனே
    சிவம் என்கின்ற தலைவியுடன்
  • அநுபோ கமதாய்
    இன்ப நுகர்ச்சி கொண்டவனாக,
  • சிவஞா னமுதே
    சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு
  • பசியாறி
    அதனால் அறிவுப் பசி தீர்ந்து,
  • திகழ்வோ டிருவோர்
    விளங்கும் 'தலைவன் - தலைவி' என்ற ஈருருவமும்
  • ஒருரூபமதாய்
    ஒரே உருவமாய்
  • திசைலோ கமெலாம் அநுபோகி
    எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன்
  • இவனே யெனமா லயனோ டமரோர்
    இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி,
  • இளையோ னெனவே
    இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற,
  • மறையோத
    வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற,
  • இறையோ னிடமாய்
    சிவபிரானிடத்தில் வேண்டி,
  • விளையா டுகவே
    யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக
  • இயல்வே லுடன்மா அருள்வாயே
    அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.
  • தவலோ கமெலாம்
    மிகவும் உலகங்கள் யாவும்
  • முறையோ வெனவே
    இது முறையாகுமா என்று ஓலமிட,
  • தழல்வேல் கொடுபோய்
    நெருப்பை வீசும் வேலுடன் சென்று
  • அசுராரைத் தலைதூள் பட
    அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி,
  • ஏழ் கடல்தூள் பட
    ஏழு கடல்களும் தூள்படும்படி,
  • மாதவம்வாழ் வுறவே
    சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு
  • விடுவோனே
    அந்த வேலைச் செலுத்தியவனே,
  • கவர்பூ வடிவாள்
    மனம் கவரும் மலரின் அழகுடையவளும்,
  • குறமா துடன்
    குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம்
  • மால் கடனா மெனவே
    ஆசை கொள்வது உன் கடமை என்று
  • அணைமார்பா
    அவளை அணைந்த மார்பனே,
  • கடையேன் மிடிதூள் பட
    கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும்,
  • நோய் விடவே
    என் நோய் தொலையவும் (அருளி),
  • கனல்மால் வரைசேர் பெருமாளே.
    அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com