தானான தான தானான தான
தானான தான ...... தந்ததான
காணாத தூர நீணாத வாரி
காதார வாரம ...... தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோர
நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
நாடோறும் வாடிம ...... யங்கலாமோ
சோணாச லேச பூணார நீடு
தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா
தோலாத வீர வேலால டாத
சூராளன் மாளவெ ...... குண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சி ...... றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.
- காணாத தூர நீள் நாத வாரி
கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து ஓயாத அலையோசை உள்ள கடலின் - காதாரவாரம் அதன்பினாலே
வதைக்கின்ற ஆரவாரமும், அதன் பின்பாக, - கால் ஆளும் வேளும்
தென்றற் காற்றை தேர்போல் கொண்ட மன்மதனும், - ஆலால நாதர் காலால் நிலாவும்
கடலில் பிறந்த விஷத்தை உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும்*, - முனிந்து பூமேல்
இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது - நாணான தோகை நூலாடை சோர
நாணம் கொண்ட மயில் போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ, - நாடோர்கள் ஏச அழிந்து தானே
நாட்டில் உள்ளோர் பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே - நானாபவாத மேலாக
பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட, - நாடோறும் வாடி மயங்கலாமோ
நாள்தோறும் வாட்டமடைந்து மயங்கலாமோ? - சோணாசல ஈச
சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே, - பூணார நீடு தோள் ஆறும் ஆறும் விளங்குநாதா
அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற நாதனே, - தோலாத வீர
தோல்வியே அறியாத வீரனே, - வேலால் அடாத சூராளன் மாள
உனது வேலைக் கொண்டு, தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக - வெகுண்ட கோவே
கோபித்துச் செலுத்திய தலைவனே, - சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
விண்ணுலகில் வாழ்ந்த மாது தேவயானையின் - தீராத காதல்சிறந்த மார்பா
நீங்காத காதல் நிறைந்த மார்பை உடையவனே, - தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவர்கள் முதலியோர் மூன்று எனக் கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும் - தேவாதி தேவர்கள் தம்பிரானே.
தேவர்களுக்கு அதிதேவர்களாய் உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே.



