திருப்புகழ் 403 இருளளகம் அவிழ (திருவருணை)

தனதனன தனதனன தான தத்த தந்த
தனதனன தனதனன தான தத்த தந்த
தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான
இருளளக  மவிழமதி  போத  முத்த  ரும்ப 
இலகுகயல்  புரளஇரு  பார  பொற்ற  னங்கள் 
இளகஇடை  துவளவளை  பூச  லிட்டி  ரங்க  ......  எவராலும் 
எழுதரிய  கலைநெகிழ  ஆசை  மெத்த  வுந்தி 
யினியசுழி  மடுவினிடை  மூழ்கி  நட்பொ  டந்த 
இதழமுது  பருகியுயிர்  தேக  மொத்தி  ருந்து  ......  முனிவாறி 
முருகுகமழ்  மலரமளி  மீதி  னிற்பு  குந்து 
முகவனச  மலர்குவிய  மோக  முற்ற  ழிந்து 
மொழிபதற  வசமழிய  ஆசை  யிற்க  விழ்ந்து  ......  விடுபோதும் 
முழுதுணர  வுடையமுது  மாத  வத்து  யர்ந்த 
பழுதில்மறை  பயிலுவஎ  னாத  ரித்து  நின்று 
முநிவர்சுரர்  தொழுதுருகு  பாத  பத்ம  மென்று  ......  மறவேனே 
ஒருசிறுவன்  மணமதுசெய்  போதி  லெய்த்து  வந்து 
கிழவடிவு  கொடுமுடுகி  வாச  லிற்பு  குந்து 
உலகறிய  இவனடிமை  யாமெ  னக்கொ  ணர்ந்து  ......  சபையூடே 
ஒருபழைய  சருகுமடி  ஆவ  ணத்தை  யன்று 
உரமொடவ  னதுவலிய  வேகி  ழிக்க  நின்று 
உதறிமுறை  யிடுபழைய  வேத  வித்தர்  தந்த  ......  சிறியோனே 
அரியவுடு  பதிகடவி  யாட  கச்சி  லம்பொ 
டழகுவட  மணிமுடிவி  யாள  மிட்ட  ழுந்த 
அமரரொடு  பலர்முடுகி  ஆழி  யைக்க  டைந்து  ......  அமுதாக 
அருளுமரி  திருமருக  வார  ணத்தை  யன்று 
அறிவினுட  னொருகொடியி  லேத  ரித்து  கந்த 
அருணகிரி  நகரிலெழு  கோபு  ரத்த  மர்ந்த  ......  பெருமாளே. 
  • இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள் இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க
    கரிய கூந்தல் அவிழ, சந்திரனைப் போன்ற முகத்தில் உண்டான முத்துப் போன்ற வேர்வை வெளித்தோன்ற, விளங்கும் கயல் மீன் போன்ற கண்கள் புரள, இரண்டு கனத்த அழகிய மார்பகங்கள் நெகிழ்ச்சியுற, இடுப்பு துவள, கை வளையல்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்க,
  • எவராலும் எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து
    யாராலும் எழுதுதற்கு முடியாததான அழகிய ஆடை தளர்ச்சி உற, ஆசை அதிகரிக்க, தொப்புளாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவில் (நீர் நிலையில்) முழுகி, நட்பு பூண்டு, அந்த வாயிதழ்களின் அமுதத்தை உண்டு, உயிரும் உடலும் ஒன்று போல ஒத்திருந்து,
  • முனிவு ஆறி முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகம் உற்று அழிந்து மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடு போதும்
    கோபம் வெறுப்பு எல்லாம் தணிந்து, நறு மணம் வீசுகின்ற மலர்ப் படுக்கையின் மீது படுத்து, முகமாகிய தாமரை கூம்ப, காம ஆசை கொண்டு அதில் அழிந்து, பேச்சு தடுமாற, தன் வசம் கெட்டழிய, அந்த ஆசையில் கவிழ்ந்து முழுகி விட்ட சமயத்திலும் கூட,
  • முழுது(ம்) உணர உடைய முது மா தவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே
    எல்லாம் உணரும்படியான முற்றிய சிறந்த தவ நிலையில் உயர்ந்ததும் குற்றம் இல்லாததுமான வேதத்தில் நெருங்கி விளங்குபவன் என்று விரும்பிப் போற்றி செய்து நின்று முனிவர்களும் தேவர்களும் வணங்கி உருகும் உனது தாமரைத் திருவடிகளை என்றும் மறக்க மாட்டேன்.
  • ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபை ஊடே
    ஒப்பற்ற சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச் சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம் கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர் யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று (ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க,
  • ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே
    ஒரு பழைய ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, (அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே,
  • அரிய உடு பதி கடவி ஆடகச் சிலம்பொடு அழகு வட(ம்) மணி முடி வியாளம் இட்டு அழுந்த அமரர் ஒடு பலர் முடுகி ஆழியைக் கடைந்து அமுதாக அருளும் அரி திரு மருக
    அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து, பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்) அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த திருமாலின் மருகனே,
  • வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த அருண கிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே.
    சேவலை அன்று முன் யோசனையுடன் ஒரு கொடியில்* நிறுத்தி மகிழ்ந்து, திரு அண்ணாமலையில் கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com